பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க முடியாது. 3 சிறுவர்கள் தொடர்ந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு

பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க முடியாது. 3 சிறுவர்கள் தொடர்ந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு
deepavali
சுப்ரீம்கோர்ட் வரலாற்றில் முதல்முறையாக மூன்று சிறுவர்கள் வழக்கு தொடர்ந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். பொது இடங்களில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அடைந்து எங்களை போன்ற குழந்தைகளுக்கு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுகிறது. எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று அர்ஜூன் கோபால், ஆரே பண்டாரி, ஜேயா ராவ் பசின் ஆகிய 3 சிறுவர்கள் சார்பில் அவர்களுடைய தந்தையர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. சிறுவர்கள் சார்பிலும், பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பிலும், என இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: ”தீபாவளி பண்டிகையின்போது பாரம்பரியமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகின்றன. அதற்கு தற்போது தடை விதிக்கும் பட்சத்தில் அது, இந்த பண்டிகையை கொண்டாடுபவர்களின் உரிமைகளில் தலையிடுவது போல் அமைந்துவிடும். அதனால், பட்டாசு வெடிப்பதற்கு தடை எதுவும் தேவை இல்லை.

அதே நேரத்தில், அரசாங்கம் விழிப்புணர்வு குறித்த விளம்பரங்களை தாமதப்படுத்தாமல் வருகிற 31-ந் தேதி முதல் நவம்பர் 12-ந் தேதி வரை அனைத்து ஊடகங்களிலும் வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும். பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பத்திரிகை மற்றும் மின்னணு ஊடகங்களில் பெருமளவில் விழிப்புணர்வு விளம்பரங்களை வெளியிட வேண்டும். அதில், எப்படி பட்டாசுகளை வெடிக்கலாம் என்பது குறித்து பாதுகாப்பு விழிப்புணர்வுடன் கூடிய படங்களும் வாசகங்களும் கண்டிப்பாக இடம் பெறவேண்டும்.

கடந்த 2005-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்றும், இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை வெடிக்கக் கூடாது என்றும் விதிக்கப்பட்ட நிபந்தனையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதிக அளவில் சத்தம் எழுப்பும் பட்டாசுகளையும், அதிக அளவில் புகை வெளியிடும் பட்டாசுகளையும் வெடிக்கக் கூடாது. மனுதாரர்கள் கோரியுள்ளபடி, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு பட்டாசு வெடிக்க வாருங்கள் என்று யாரையும் கூற முடியாது. அதுபோன்ற ஏற்பாடுகள் குழப்பத்தையே ஏற்படுத்தும். அதனால், பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்க முடியாது” என்று உத்தரவிட்டுள்ளனர்.

English Summary: Move to Ban Crackers This Diwali Turned Down by Supreme Court

Leave a Reply