சென்னையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவத்தலங்களில் சிறப்பு வாய்ந்தது, வேளச்சேரி விஜய நகரில் உள்ள
தண்டீஸ்வரர் ஆலயமாகும். சோழ மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் கட்டிய முதல் சிவாலயம் என்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு. சோமுகாசுரன் எனும் அரக்கன் 4 வேதங்களையும் பிரம்மாவிடம் இருந்து பறித்து கடலுக்கு அடியில் சென்று சேற்றில் மறைத்து வைத்தான்.
இதனால் பிரம்மா நடத்தி வந்த படைப்புத் தொழில் நின்று போனது. இது பற்றி மகா விஷ்ணுவிடம் பிரம்மா முறையிட்டார். உடனே விஷ்ணு, மச்சவதாரம் எடுத்து சென்று சோமுக சுரனை அழித்து 4 வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.
சேற்றில் புதைந்திருந்ததால், 4 வேதங்களும், தங்கள் தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்வது என்று பிரம்மனிடம் கேட்டன. அவர் கூறியபடி 4 வேதங்களும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றன. அது முதல் வேதங்கள் வணங்கிய தலம் என்பதால் வேதச்சேரி என்றானது. நாளடைவில் அது வேளச்சேரி என மருவியது.
முனிவர்கள் வேள்வி நடத்தியதால் இத்தலம் வேளச்சேரி ஆனதாகவும் சொல்கிறார்கள். இத்தலத்து ஈசனுக்கு தண்டீஸ்வரர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு புராண நிகழ்வு காரணமாக கூறப்படுகிறது. துவாரபயுகத்தில் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் வந்தான்.
உடனே மார்க்கண்டேயன் திருக்கடையூர் தலத்துக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார். என்றாலும் எமன் பாசக்கயிறை வீசினான். அந்த கயிறு லிங்கம் மீது பட்டது. உடனே ஈசன் வெளிப்பட்டு எமனை எட்டி உதைத்தார். அதோடு எமன் பதவியையும் அவன் வைத்திருந்த தண்டத்தையும் ஈசன் பறித்தார்.
இழந்த பதவியைப் பெற எமன் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்துக்கு வந்து எம தீர்த்தம் உருவாக்கி சிவனை வழிபட்டான். அவனுக்கு ஈசன் காட்சி கொடுத்து வாழ்த்தினார். பிறகு அவனது தண்டத்தையும் திருப்பிக் கொடுத்தார். அன்று முதல் எமன் கேட்டுக் கொண்டபடி இத்தலத்து ஈசன் தண்டீஸ்வரர் ஆனார்.
இத்தலத்துக்கு தண்டீசுவரம் என்ற பெயரும் உண்டு. ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழன் இங்கு 10-ம் நூற்றாண்டில் தண்டீஸ்வரருக்கு கோவில் கட்டினார். அதை உறுதிபடுத்தும் கல்வெட்டுக்கள் கருவறை சுவர்களில் உள்ளன. நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் 5 நிலை ராஜகோபுரத்துடன் தெற்கு நோக்கி உள்ளது.
கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் இடது பக்கம் பெரிய மண்டபத்தில் விநாயகரை காணலாம். அவரை வணங்கிவிட்டு வழக்கம் போல கொடிமரம், பலி பீடம், சற்று தலை குனிந்த நந்தியை தரிசனம் செய்து கருவறை நோக்கி சென்றால் இரு புறமும் விநாயகர், வள்ளி- தெய்வயானை சமேத முருகரை காணலாம்.
கருவறையில் தண்டீஸ்வரர் கிழக்குப் பார்த்து இருக்கிறார். அவரை கண்குளிர தரிசனம் செய்துவிட்டு கோஷ்டத்தை சுற்றி வந்தால் முதலில் வேத விநாயகரைப் பார்க்கலாம். கையில் 4 வேதங்களுடன் இருப்பதால் இவரை வேதவிநாயகர் என்கிறார்கள். அடுத்து குபேர மூலையில் உள்ள தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
இவரை குபேர தெட்சிணாமூர்த்தி என்றும், யோக தெட்சிணாமூர்த்தி என்றும் சொல்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து கோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அதற்கு முன்னதாக சண்டீகேஸ்வரர் அருகில் இருந்து பார்த்தால் மகாலட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய முப்பெரும் தேவியரை ஒருசேர தரிசிக்கலாம்.
அதோடு மூலவர் மற்றும் அம்பாள் சன்னதிகளின் விமானங்களை கண்டு களிக்கலாம். வெளிப்பிரகாரத்தில் அறுபத்து மூவர், நால்வர் உள்ளனர். மூன்றாம் கோபுர வாசல் அருகே கணேசர், கார்த்திகேயன், நந்தியுடன் வைத்தீஸ்வரர், மீனாட்சி சோமசுந்தரர் ஆகியோரை தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.
அங்குள்ள சொற் பொழிவு மண்டபம் அருகில் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் நாகர் சிலைகள், நர்த்தன கண்ணன் காட்சி தருகிறார்கள். இவர்களை வழிபட்டால் மகப்பேறு உண்டாகும். 16-ம் நூற்றாண்டில் இத்தலத்தில் அப்பைய தீட்சிதர் தனி சன்னதி கட்டி தாயார் ஸ்ரீகருணாம்பிகையை நிறுவினார்.
அம்பாள் தெற்கு நோக்கி காட்சித் தருகிறாள். தாயார் சன்னதியில் திருவேற்காடு, மாங்காடு தலத்தில் பதிக்கப்பட்டிருப்பது போன்று ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கிழக்கு வாசல் மூடப்பட்டே இருக்கும். பிரதோஷம் போன்ற முக்கிய நாட்களில் மட்டும் திறக்கிறார்கள்.
மேற்கு பகுதியில் எமன் ஏற்படுத்திய தீர்த்தக்குளம் உள்ளது. ஒரு தடவை காஞ்சி பெரியவர் இத்தீர்த்த குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து தன் கனகாபிஷேகத்துக்கு பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்காக வேளச்சேரியை சுற்றிலும் ஏராளமான சொத்துக்களை சோழ மன்னர்கள் கொடுத்திருந்தனர்.
சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், நடராஜர் திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவார கார்த்திகை சங்காபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி என எல்லா பண்டிகைகளும் இங்கு சிறப்பாக நடக்கின்றன.
பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். வரும் திங்கட்கிழமை முதல் மார்கழி மாதம் 30 நாட்களும் தினமும் அதிகாலை 5 மணிக்கு சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. தை மாதம் முதல் தேதி இத்தலத்தில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுவது குறிப்பிடத்தக்கது.
எமன் இத்தலத்தில் மீண்டும் தன் தண்டம் பெற்றதால், பதவி இழந்தவர்கள் இங்கு சிறப்பு வழிபாடு செய்தால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம். இத்தலத்தில் அறுபது, எண்பதாம் திருமணம் நடத்துவது அதிகரித்து வருகிறது. அதோடு ஆயுள் விருத்திக்கான ஹோமங்கள் உள்பட எல்லா வகை ஹோமங்களும் இங்கு செய்யப்படுகிறது.
வேண்டுதல் நிறைவேற தண்டீஸ்வரர், கருணாம் பிக்கை, வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபடலாம். வழிபாடு மற்றும் பலன்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை ஆலய குருக்கள் குமார சாமி சிவாச்சாரியாரை 9884402525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
சிதம்பரம் சுவாமிகள் ஜீவசமாதி:
சிதம்பரம் சுவாமிகள் என்ற மகான் 18-ம் நூற்றாண்டில் இத்தலத்தில் தங்கி இருந்து பல திருப்பணிகள் செய்து வந்தார். இந்த ஆலயத்தின் தேரை உருவாக்கியது இவர்தான். இவர் ஒரு தடவை மற்ற கோவில்களுக்கும் செல்லலாம் என்று தலயாத்திரை புறப்பட்டார்.
அப்போது மிகப் பெரிய பாம்பு ஒன்று தோன்றி அவரைத் தடுத்ததாம். இதனால் சிதம்பரம் சுவாமிகள் தன் கடைசி மூச்சுவரை இத்தலத்திலேயே சேவை செய்து இறந்து விட்டார். அவரது ஜீவசமாதி இத்தலத்தினுள் உள்ளது.
கன்னிபெண்களை காப்பற்ற அமர்ந்த நிலையில் வீரபத்திரர்:
எல்லா சிவாலயங்களிலும் வீரபத்திரர் நின்ற கோலத்தில் தான் காட்சி அளிப்பாளர். ஆனால் இத்தலத்தில் கைகளில் மான், மழு தாங்கி அமர்ந்த கோலத்தில் உள்ளார். இவர் கன்னிப் பெண்களை பாதுகாப்பவராக கருதப் படுகிறார். ஒரு தடவை சப்த கன்னியர்கள் அசுரனை அழிக்கச் சென்றனர்.
தவறுதலாக அவர்கள் ஒரு மகரிஷியை கொன்று விட்டனர். இதை அறிந்த அந்த அசுரன் சப்த கன்னியர்களை கொல்ல முயன்றான். அவர்களை காப்பாற்ற சிவபெருமான் வீரப்பத்திரரை அனுப்பினார். வீரபத்திரரும் அந்த அசுரனை அழித்து சப்த கன்னியர்களைக் காப்பற்றினார்.
அதை பிரதிதிபலிக்கும் வகையில் சப்த கன்னியர்கள் அருகில் வீரபத்திரர் அமர்ந்த நிலையில் உள்ளார். பீடத்தில் நந்தி உள்ளது. பெண்கள் தங்களுக்கு எதிராக தயார், எத்தகைய அநீதிதி இழைத்தாலும், இந்த வீரபத்திரருக்கு பாலாபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால், தங்களுக்கு நேர்ந்த துயரம் தீரும் என்று நம்புகிறார்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை, சப்தகன்னியர் சன்னிதியை “செல்லியம்மன் சன்னதி” என்று பெண்கள் அழைக்கிறார்கள்.