காலையில் அருந்தக்கூடிய எளிய பானங்கள்

images (1)

காலையில் அருந்தக்கூடிய எளிய பானங்கள்

விழித்தவுடன் சுத்தமான நீர் இரண்டு டம்ளர் அருந்த மலம், சிறுநீர் கழிப்பதில் சிக்கல் இல்லாமல் இருக்கும். வெந்நீர் அருந்த மந்தம் நீங்கும்.

குழந்தைகளுக்குப் பல தானியங்கள் கலந்த சத்து மாவுக் கஞ்சி பால், வெல்லம், நாட்டுச்சர்க்கரை கலந்து கொடுக்கலாம். கேழ்வரகை முளைக்கட்டி அரைத்து, பால் எடுத்துக் கஞ்சி காய்ச்சி அருந்தலாம். இதில் கால்சியம் நிறைவாக உள்ளதால், எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்குச் சிறந்த பானம்.

பாதாம், சோயா போன்றவற்றை நீரில் ஊறவைத்து அரைத்து, பால் எடுத்து, கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால், உடல் பலம் பெறும். இதனுடன், வெல்லம், ஏலப்பொடி, நாட்டுச்சர்க்கரை முதலானவற்றைச் சேர்த்துப் பருகலாம்.

வெயில் காலங்களில் கம்பங்கஞ்சியை மோருடன் கலந்து குடிக்க, உடல் வெப்பம் நீங்கும்.

தேங்காய்ப் பாலை வெறும் வயிற்றில் குடிக்க, வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்கும்.

எதைத் தவிர்க்க வேண்டும்?

காலையில், மிகவும் புளிப்பு உணவுகளான எலுமிச்சை, புளி, தக்காளி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மேலும், வாழைப்பழம், எண்ணெயில் பொரித்த உணவுகள், மாமிச உணவு, இளநீர் முதலானவற்றை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

இவை பித்தம், வாதம் முதலானவற்றை அதிகப்படுத்தி, வயிற்று நோய்கள், குடல் நோய்களை உண்டாக்கும். வாழைப்பழத்தை உணவுக்குப் பின் எடுத்துக்கொள்ளலாம்.

அதே போல் டீ, காபி முதலானவற்றை காலையில் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். இவை, வயிற்றுக்கோளாறு, குடல்புண், செரிமானக் குறைபாடு முதலானவற்றை ஏற்படுத்தும்.

வெறும் வயிற்றில் இலகுவானதும், எளிதில் சக்திதர வல்லதும், எளிதில் ஜீரணமாகக் கூடியதுமான உணவுகளையும், நீர்ச்சத்து உடையதுமான உணவுகளை எடுத்துக்கொள்வதுதான் நம் போன்ற வெப்ப மண்டல நாட்டு மக்களுக்குப் பொருந்தும்.

 

Leave a Reply