குளிர் காலம் நெருங்குகிறது. ஆரோக்கியமானவர்களேயே சில சமயம் முடக்கிப்போடும் இந்தப் பருவத்தில், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்கள் நிலையைக் கேட்கவே வேண்டாம். ‘இந்தியாவில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 மில்லியனுக்கும் மேல் இருக்கும்’ என்கிறது ‘உலக சுகாதார நிறுவனம்.’
ஆஸ்துமா என்றால்?
நுரையீரலுக்குச் செல்லும் காற்றுக் குழாய்கள் இறுக்கமாகி சுருக்கம் அடைந்துவிடுகின்றன. அதில் சளி (Mucus) சேரும்போது, காற்று சென்று வரப் போதுமான வழி இல்லாமல் போய்விடுகிறது. இதனால், ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும்; நடக்க முடியாது; படிக்கட்டுகளில் ஏற முடியாது.
வீசிங் என்றால்?
சுவாசிக்கும்போது, நுரையீரலில் இருந்து சத்தம் கேட்கும். அதாவது இறுக்கமான டியூபில் இருந்து காற்று வெளியேறும்போது, ஒருவித ‘விசில்’ சத்தம் வரும். அதுபோல, மூச்சை இழுக்கும்போதும், வெளிவிடும்போதும் சத்தம் கேட்கும். இதை ‘வீசிங்’ என்போம்.
ஆஸ்துமா வகைகள்
குழந்தைப் பருவத்தில் வரும் ஆஸ்துமா. பெரும்பாலானோருக்கு இது பதின்பருவ வயதில் தானாகவே சரியாகிவிடும். சிலருக்குப் பதின்பருவத்தில்தான் ஆஸ்துமா பிரச்னை தொடங்கும்.
தூசு, காற்று, சுற்றுப்புற மாசு, சிந்தட்டிக் பர்ஃப்யூம், டாய்லெட் கிளீனர் நெடி, செல்லப் பிராணிகளின் முடி போன்றவற்றால் வரும் அலர்ஜிக் ஆஸ்துமா.
உடற்பயிற்சி செய்த உடனே வரும் ஆஸ்துமா.
குளிர்காலத்தில் வரக்கூடிய ஆஸ்துமா.
செயற்கைக் குளிரூட்டிகளால் வரும் ஆஸ்துமா.
உணவு ஏதாவது ஒப்புக்கொள்ளவில்லை என்றால் வரும் ஆஸ்துமா. சிலருக்கு 30 வயது வரை ஒப்புக்கொண்ட உணவுகள் திடீரென்று ஒப்புக்கொள்ளாமல் போகலாம்.
யாருக்கு ஆஸ்துமா வரலாம்?
குழந்தைகள், நடுத்தர வயதினர், 50 வயதுக்குக் குறைந்தவர்களுக்கும் ஆஸ்துமா வர வாய்ப்புகள் உள்ளன. பெரும்பாலும் பதின்பருவ வயதில் வந்து, நீண்ட காலம் வரை தொல்லை கொடுக்கும்.
கிராமங்களைவிட நகர்ப்புறவாசிகளுக்கு ஆஸ்துமா அதிகமாக வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் சுற்றுச்சூழல் மாசு.
குழந்தைகளுக்குத் தொடர்ந்து ஏதாவது வைரஸ் தொற்று ஏற்பட்டால், அது நுரையீரலில் பிரச்னையை ஏற்படுத்தலாம். அதை பிரான்குலைட்டீஸ் (Bronchiolitis) என்பார்கள்.
ஏற்கெனவே வீசிங் இருக்கும் பெண்கள் சிலருக்கு கருவுற்ற பிறகு, ஹார்மோன் மாற்றங்களால் தானாகவே ஆஸ்துமா சரியாகலாம்.
அறிகுறிகள்
அதிகாலையில் மூச்சுவாங்கும் பிரச்னை.
மூச்சுவாங்குதல்.
ஆக்சிஜன் குறைவாகி, தீவிரமான மூச்சுவாங்குதல்.
இரவில் இருமல் இருக்கும்; தூங்க முடியாமல் அவதியாக இருக்கும்.
உடற்பயிற்சி செய்ய முடியாத நிலை.
இருமலுடன் சளி வெளிவரும். ஆனால், தொற்று இருக்காது.
குழந்தைகள் பெரும்பாலும் நெஞ்சு வலி, நெஞ்சில் ஏதோ புதுவித உணர்வு என்று சிரமப்படுவர்.
மிதமாக மூச்சுவாங்குதல். அதாவது படிக்கட்டுகளில் ஏறும்போது, வீட்டு வேலைகளைச் செய்யும்போது மட்டும் மூச்சு வாங்குதல் பிரச்னை வரும்.
இன்ஹேலர் ஏன்?
இன்ஹேலரைப் பயன்படுத்தும் டெக்னிக் மிகவும் முக்கியம். சரியாக இன்ஹேலரைப் பயன்படுத்தும் முறை தெரியாமல் இருந்தால், பயன் இல்லாமல் போகலாம். மாத்திரை சாப்பிட்டால் அது வயிற்றுக்குள் செல்லும்; வயிறு கிரகித்துக்கொள்ளும். ஆனால், மாத்திரைகளால் பின்விளைவுகள் வரலாம். இன்ஹேலர், நுரையீரலில் மட்டுமே நேரடியாக மருந்தைச் செலுத்துகிறது. அதனால், பின்விளைவுகளை ஏற்படுத்தாது. பின்விளைவுகள் இல்லாத சிறந்த டெக்னிக்தான் இன்ஹேலர். இதைத் தவறாக ஸ்ப்ரே செய்தால், பாதி காற்றில் கலந்துவிடும். சிறிது மட்டுமே உடலுக்குள் செல்லும். மருத்துவர்களின் ஆலோசனைப்படி இன்ஹேலர் பயன்படுத்துவது நல்லது.
சிகிச்சைகள் என்னென்ன?
முதல் கட்டமாக இன்ஹேலர் தரப்படும். அடுத்த கட்டமாக மாஸ்க் போட்டு அதற்கு உரிய மருந்துகள், ஆன்டிபயாடிக் தரப்படும்.
சிலருக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருந்துகள் கொடுக்கப்படும். அலர்ஜி தொடர்பான ஆஸ்துமாவுக்கு ஆன்டிஅலர்ஜிக் மருந்துகள் கொடுக்கலாம். நோயாளியின் பிரச்னையைப் பொறுத்து, சிகிச்சைகள் மாறுபடும்.
ஆஸ்துமாவைக் குணப்படுத்த முடியுமா?
ஆஸ்துமாவை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுக்குள்வைக்கலாம். மருந்துகள், சிகிச்சைகள், டாக்டரின் ஆலோசனைகளுக்கு உட்பட்டு வாழ்வியல் சூழலை அமைத்துக்கொண்டால், ஆஸ்துமா பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
கவனிக்க…
ஒவ்வொருவரும் தனக்கான டைரியைப் பராமரிப்பது அவசியம். சிலருக்கு முட்டை, கத்திரிக்காய், தயிர், குளிர் பானங்கள் சாப்பிட்டால், ஆஸ்துமா வரும். சிலருக்கு இந்த உணவுகள் சாப்பிட்டாலும் ஒன்றுமே செய்யாது. எனவே, தனக்கு எது அலர்ஜி எனக் குறித்துவைத்துக்கொள்வது நல்லது.
ரத்தப் பரிசோதனை மூலமாக எது அலர்ஜி என்று கண்டுபிடிக்கலாம்.
ஆஸ்துமா நோயாளிகள் கருவுற்றால், தொடர்ந்து செக்அப் செய்துகொள்வது முக்கியம். ஏனெனில், ஆக்சிஜன் குறைந்தால் குழந்தை பாதிக்கப்படலாம்.
‘ஸ்கின் அலர்ஜிக் டெஸ்ட்’ எனச் சொல்வார்கள். சிக்கன், மட்டன், கத்திரிக்காய் என கொஞ்சமாகச் சருமத்தில்வைத்து, ஏதாவது ரியாக்ஷன் ஏற்படுகிறதா எனக் கண்டுபிடிக்கலாம்.
வைரஸ் தொற்று, நிமோனியா ப்ளு, இன்ஃப்ளூயன்சாவுக்கு தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளலாம்.
சைனஸ் இருந்து, தலையணையைப் பயன்படுத்தும் போது, ஆஸ்துமா பிரச்னைக்கு ஆளாகிறவர்கள், டாக்டர் வழிகாட்டுதல்படி நீராவி பிடிக்கலாம்.
இன்ஹேலரில் பல வகைகள் உண்டு. நோயாளிக்கு ஏற்ப அவை மாறுபடும். மருத்துவர் பரிந்துரைக்கும் இன்ஹேலரைப் பயன்படுத்துவதுதான் சரி.
பீக் ஃப்ளோ மீட்டரில் சோதித்து, இன்ஹேலரைச் சரியாகப் பயன்படுத்தினால், ஆஸ்துமா கட்டுக்குள் வரும்.
பீக் ஃப்ளோ மீட்டரில் (Peak Flow meter) ஊதிப் பரிசோதித்தால், ஆஸ்துமாவைக் கண்டறியலாம். ஊதும்போது 500 மீட்டர் வேகம் காண்பித்தால், அது நார்மல். 100, 200, 300 என்ற அளவு காண்பித்தால், ஆஸ்துமா பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம்.
பீக் ஃப்ளோ மீட்டரில் ஊதும்போது, கடந்த முறை 400 இருந்த அளவு, இந்த முறை 100 எனக் காட்டினால், அவர்களுக்கு உடனடி சிகிச்சை அவசியம்.
ஆஸ்துமாக்காரர்கள் செல்லப் பிராணிகளை வளர்க்கக் கூடாது.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது.
புகை, மதுப் பழக்கத்தைக் கட்டாயமாகக் கைவிட வேண்டும்.
மல்ட்டி வைட்டமின் நிறைந்த காய்கறிகள், கீரைகள் சாப்பிடலாம்.
அதிகக் கூட்டங்கள் நிறைந்த சூழலில் பயணம் செய்யும்போது மாஸ்க் போட்டுக்கொள்வது பாதுகாப்பானது. இது தொற்றைத் தவிர்க்கும்.
குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் இருப்பதைத் தவிர்க்கலாம்.
ஃப்ரெஷ் காற்று, ஃப்ரெஷ்ஷான சூழலில் நடைப்பயிற்சி செய்வது நல்லது.