என்னை நம்பி காங்கிரஸ் இல்லை. காங்கிரஸை நம்பித்தான் நான் உள்ளேன். குஷ்பு
தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை மாற்ற வேண்டும் என ப.சிதம்பரம் உள்பட முக்கிய தலைவர்கள் சோனியா, மற்றும் ராகுல்காந்தியை சந்தித்துவிட்டு வந்துள்ள நிலையில், இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக நல்ல முறையில் பணியாற்றி கொண்டிருப்பதாகவும் யாரையும் நம்பி காங்கிரஸ் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்து உள்ளார்.
நேற்று டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, ”நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு பற்றி ஆலோசனை செய்வதற்காக தலைவர் சோனியா காந்தியையும், துணைத்தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்தேன். தமிழக காங்கிரஸ் கட்சியை தேர்தல் நேரத்தில் எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து அவர்களுடைய அறிவுரையை கேட்கும் நோக்கில் சந்தித்தேன்.
கூட்டணி பற்றி தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் முடிவெடுக்க முடியும். எங்கள் தலைவி சோனியா காந்தி மற்றும் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி தான் கூட்டணி இருக்கும். எனவே கூட்டணி பற்றி தற்போது எதுவும் கூறவிரும்பவில்லை.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை நீக்க வேண்டும் என்று ஒரு குழு மேலிட தலைவர்களை சந்தித்தது பற்றி நான் வெளிப்படையாக கூறமுடியாது. நடிகர்களை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என்று கார்த்தி சிதம்பரம் பேசுவதற்கு முன்பே நான் பலமுறை கூறியிருக்கிறேன், யாரையும் நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சியை நம்பித்தான் அனைவரும் இருக்கிறார்கள். காங்கிரஸ் இல்லை என்றால் கார்த்தி சிதம்பரம் இல்லை.
இத்தனை ஆண்டுகளாக இந்தியாவில் மிகவும் பழைய, பாரம்பரியமுள்ள கட்சி என்றால் அது காங்கிரஸ் மட்டுமே இருக்கமுடியும். இது அவருக்கும் நன்றாக தெரியும். என்னையோ, கார்த்தி சிதம்பரத்தையோ, ப.சிதம்பரத்தையோ, தங்கபாலுவையோ நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை. நாங்கள் அனைவரும் காங்கிரசை நம்பித்தான் இருக்கிறோம். இதனை கார்த்தி சிதம்பரம் புரிந்து கொண்டால் நல்லது” என்றார்.