திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் தங்கப்புதையலா? பெரும் பரபரப்பு

திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோவிலில் தங்கப்புதையலா? பெரும் பரபரப்பு
thiruvarur
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் ரகசிய அறையை திறந்தபோது அங்கு ஏராளமான தங்கப்புதையல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ஒரே நாளில் பத்மனாப சுவாமிகள் உலகப்புகழ் பெற்றார். அதேபோல் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோவிலிலும் தங்கப்புதையல் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அந்த கோவிலில் உள்ள ரகசிய அறைகள திறந்தால், நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற புதையல் குறித்த ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் கூறியதாவது:

”தியாகராஜர் கோயிலில் தியாகராஜர் சுவாமிகளின் கருவறைக்குள்ளும், இரண்டாம் பிரகாரத்தில் ஆனந்தேஸ்வரர் கருவறைக்குள்ளும் இரண்டு ரகசிய அறைகள் கல் கொண்டு மூடபட்டு இருக்கிறது. கி.பி 1013-ம் ஆண்டு வாக்கில் அந்நியர்கள் தமிழ்நாட்டின் மீது படையெடுத்து கோயில்களையெல்லாம் சூறையாடினர். சோழநாட்டு கோவில்களில்  சூறையாடியதை முகமதிய எழுத்தாளர்கள் தங்கள் குறிப்பேடுகளில் குறிப்பிட்டுள்ளனர். டெல்லியிலிருந்து வந்து மதுரையை மையமாக கொண்டு சுல்தான்கள் ஆட்சி செய்தபோதும், தமிழக கோயில்கள் கொள்ளையடிக்கபட்டன.

அப்படி கொள்ளையடிக்கப்பட்ட கோயில்களில் தியாகராஜர் கோயிலும், சிதம்பரம் நடராஜர் கோயிலும் ஒன்று. இதனால் 80 ஆண்டு காலம் கோயில்கள் மூடப்பட்டு பூஜைகள் எதுவும் நடக்காமல் இருந்தது என்பதை கல்வெட்டுகள் மூலமாக உறுதி செய்ய முடிகிறது. அந்நிய படையெடுப்புக்கு பயந்து, தியாகராஜர் கோயிலில் இரண்டு அறைகளிலும் விலை உயர்ந்த நகைகள், சாமி உருவ சிலைகள் மற்றும் காண கிடைக்காத பொக்கிஷங்களை வைத்து கர்ப்பகிரக வாயிலை மூடியிருக்க வேண்டும். மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலின் பொருள்கள் தியாகராஜர் கோயிலில் வைத்து பாதுகாக்கப்பட்டது என கல்வெட்டுகள் கூறுகிறது. அந்த பொருள்களும் இந்த அறைகளில் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மேலும், பல ஆண்டுகளாக ரகசிய அறைகளை திறக்க வேண்டும் என பலர் கூறி வருகிறார்கள். ஆனால், அறநிலையத்துறை அதற்கு செவிசாய்க்க மறுக்கிறது. இப்போது உள்ள தொழில் நுட்ப வளர்ச்சியில் கோயிலை சேதப்படுத்தாமல், அபிஷேக நீர் வெளியேறும் கோமுகம் வழியாக கேமராவுடன் கூடிய நவீன கருவியை செலுத்தி, ரகசிய அறைக்குள் என்ன இருக்கிறது என கண்டுபிடித்து விடலாம். ஆனால், ஆட்சியாளர்களும், அறநிலையத்துறை அதிகாரிகளும் அதை கண்டு கொள்ள மறுக்கிறார்கள். அப்படி செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், அவர்கள் செய்ய மறுப்பது ஏன் என்பதுதான்  புரியவில்லை”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply