தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க முடியாது. கார்த்திக் சிதம்பரம்
நேற்று குஷ்பு அளித்த பேட்டியில் கார்த்திக் சிதம்பரம் உள்பட எந்த ஒரு தனி மனிதரையும் நம்பி காங்கிரஸ் இல்லை என்று கூறினார். இதுகுறித்து இன்று கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘குஷ்பு உள்பட எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் விமர்சிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம் கூறியதாவது
குஷ்புவை பற்றி நான் எதுவும் விமர்சிக்கவில்லை. எந்தத் தனிநபரை பற்றியும் நான் விமர்சிக்கவில்லை. விமர்சிக்க விரும்பவும் இல்லை. என்னிடம் நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இருக்கிறதா என கேட்டார்கள். அதற்கு நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என்று தான் சொன்னேன். மற்றபடி நான் யாரைப்பற்றியும் நான் விமர்சிக்கவில்லை.
மதுவிலக்கை தவிர்த்து கோவன் சொன்ன மற்ற எந்தக் கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை.
தமிழகத்தில் பள்ளிகளை விட டாஸ்மாக் கடைகள் தான் அதிகம் உள்ளன. கல்வியில் முன்னிலையில் உள்ள தமிழகத்தில் டாஸ்மாக் வருமானத்தை வைத்து அரசு நடக்கிறது என்பது கொச்சைத்தனமான விஷயம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என எண்ணுவது பொருத்தமாக இருக்காது. ஆட்சியில் பங்களிப்பு இருக்கும் என நம்புகிறேன். தற்போது உள்ளதை விட கூடுதலாக பிரதிநிதித்துவம் பெறவேண்டும் என்பதே எனது விருப்பம்.
தமிழகத்தில் கொள்கை ரீதியிலான கூட்டணி என்பதெல்லாம் இல்லை. எல்லோருடைய கதவும் எல்லோருக்கும் திறந்திருக்கும். அதேபோல் எங்கள் கதவும் எல்லோருக்கும் திறந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் மட்டும் கோஷ்டி பூசல் இருப்பதாகச் சொல்வதை ஏற்க முடியாது. எல்லா கட்சிக்குள்ளும் நிச்சயமாகக் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதனால் வெற்றி தோல்வி பாதிக்காது. எந்தக் கட்சியில் கருத்து வேறுபாடு இல்லை. தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சியிலும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. இது கட்சிக்கு நல்லது தான். போட்டி, கூட்டம் எல்லாம் நடக்கும். இது கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும்.
தமிழகத்தில் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது கூட்டணி மட்டும் தான். கொள்கை என எதுவும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. பெரிய கூட்டணி வெற்றி பெறும் அவ்வளவு தான்.
இவ்வாறு கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.