ராமர் பிறந்த இடம் பாகிஸ்தானா? முஸ்லீம் எழுத்தாளரின் சர்ச்சை கருத்து
அயோத்தியில் தசரத மன்னரின் மகனாக ராமபிரான் பிறந்ததாக இந்துக்கள் அனைவரும் நம்பி வரும் நிலையில் முஸ்லீம் எழுத்தாளர் ஒருவர் ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை என்றும் பாகிஸ்தானில் உள்ள ரஹ்மான்தேரி என்ற இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்றும் அவர் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய முஸ்லிம் சட்டவாரிய பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் குரேஷி என்பவர் எழுதிய ‘அயோத்தியாவும் அதன் உண்மைகளும்’ என்ற புத்தகத்தில், ராமரின் தந்தை தசரதர் ஹரியானா, பஞ்சாப், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதிகள் உள்ளடக்கிய ‘சப்தசிந்து ‘ என்று பகுதிகள் அடங்கிய ராஜ்ஜியத்தை ஆட்சி செய்து வந்ததாகவும், இதில் பாகிஸ்தானில் தற்போது தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள ராமன் தேரி என்ற இடத்தில்தான் ராமர் பிறந்துள்ளதாகவும், பின்னாளில் இந்த இடம் ரஹ்மான் தேரி என்று மருவி வந்ததாகவும் எழுதியுள்ளார். இந்த ரஹ்மான் தேரி ஆப்கானிஸதானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர் தனது புத்தகத்தில், ” அயோத்தியில் ராமர் கோவிலை இடித்து விட்டு, அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டதாக பிரிட்டிஷ் காலத்தில்தான் செய்தி பரவியதாகவும், இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் பிரித்தாள பிரிட்டிஷார் செய்த சூழ்ச்சியே இது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதோடு துளசிதாசர் எழுதிய ராமாயணத்தில்தான் ராமர் அயோத்தியில் பிறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதனை வைத்து பிரிட்டிஷ் அரசு, இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரித்தாண்டதாகவும் அப்துல் ரஹீம் குரேஷி அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். அப்துல் ரஹீமின் இந்த புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.