நிதிஷ்குமார் கூட்டணி அபார வெற்றி. பாஜக தோல்விக்கு மோடி காரணமா?
09`
பிகார் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 7 மணி முதல் எண்ணப்பட்டது. முதலில் பாஜக கூட்டணி முன்னணியில் இருப்பதுபோன்று முடிவுகள் வெளிவந்தபோதிலும் நேரம் ஆக ஆக பாஜக கூட்டணி பின் தங்கியது. லாலு- நிதிஷ் கூட்டணி 178 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. நிதிஷ்குமாரின் ஜனதா தள் 71 இடங்களையும், லாலு பிரசாத் யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதா தள் 80 இடங்களையும் காங்கிரஸ் 27 இடங்களிலும் கைப்பற்றியுள்ளது. லாலு பிரசாத் யாதவ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தபோதிலும் மீண்டும் நிதிஷ் குமார் முதல்வராகிறார்.
இந்த தேர்தலுக்காக பிரதமர் மோடி பீகார் மாநிலம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம் செய்தார். இருப்பினும் பாஜகவால் 53 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்துள்ளது. மோடி தீவிர பிரச்சாரம் செய்தும் தோல்வி கண்டுள்ளதால் இந்த தோல்வி மோடியின் தோல்வியாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மீண்டும் முதல்வராகும் நிதீஷ்குமாருக்கு பிரதமர் மோடியும், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பீகார் தேர்தல் முடிவு குறித்து தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை பார்ப்போம்
கருணாநிதி
தி.மு.க. தலைவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ”நிதிஷ்குமார் தலைமையிலான மகா கூட்டணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். சிறந்த நிர்வாகம், வளர்ச்சி பணிகளை அங்கீகரித்து பீகார் மக்கள் வெற்றி பெறச் செய்துள்ளனர். இது சமூக நீதி அளிப்பதில் அர்ப்பணிப்பு, பொருளாதார முன்னேற்றத்திற்கு கிடைத்த வெற்றி” எனக் கூறியுள்ளார்.
ராமதாஸ்
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களின் ஐக்கிய ஜனதா தளம் இடம் பெற்ற மகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருப்பதற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பீகார் மாநில முதலமைச்சராக தொடர்ந்து மூன்றாவது முறையாக தாங்கள் பதவியேற்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் சமூக நீதிக் கட்சிகள் பெரும் தோல்வி அடைந்த நிலையில், அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் மிகப் பெரிய வெற்றி பெற்று பீனிக்ஸ் பறவையாக உருவெடுத்திருப்பது மிகப் பெரிய சாதனையாகும். நிர்வாகத் திறமைமிக்க, பிகாரின் வளர்ச்சியை விரைவுபடுத்திய உங்கள் தலைமையிலான கூட்டணி அரசு, லாலு பிரசாத்தின் வழிகாட்டுதலுடன் மிகப்பெரிய சாதனைகளை படைக்கும் என்று நம்புகிறேன். அதற்காக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கெஜ்ரிவால்
இது குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில், ”பிகார் சட்டமன்ற தேர்தலில் வரலாற்று சாதனை புரிந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ”பாரதிய ஜனதா மீதான கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். இந்து-முஸ்லிம் ஒற்றுமையே அவசியம் எனவும், அன்பு, வளர்ச்சி ஒற்றுமையே அவசியம் எனவும் மக்கள் உணர்த்தியுள்ளார்கள். பிகாரின் வளர்ச்சிக்காக நிதிஷ்குமாருக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும்.
நரேந்திர மோடி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளால் இந்தியாவை பிளவுபடுத்த முடியாது. இனிமேலாவது, மத்திய அரசு வெறுப்புணர்வை கைவிட்டு வளர்ச்சிக்கான பணியை தொடங்க வேண்டும். பிரதமர் வெளிநாட்டிற்கு செல்லாமல் விவசாயிகள் மற்றும் இளைஞர்களை தேடிச் செல்ல வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
அமித்ஷா
பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, ”மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். வெற்றி பெற்ற நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவிற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பிகாரின் புதிய அரசு மாநிலத்தை வளர்ச்சிபாதையில் எடுத்துச் செல்ல எங்களுடைய வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜி.கே.வாசன்
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், ”பீகார் தேர்தலில் வெற்றி பெற்ற நிதிஷ், லாலு பிரசாத் தலைமையிலான கூட்டணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தலித், ஒடுக்கப்பட்ட மற்றும் அடித்தட்டு மக்களின் எண்ணங்களை தேர்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது” எனக் கூறியுள்ளார்.
ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ”பாஜ.க.வின் தேர்தல் அணுகுமுறை, சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கு கிடைத்த கண்டனமே இந்த தேர்தல் முடிவு. பா.ஜ.க. வாதத்திற்கு எடுத்தக் கொண்டவற்றை பீகார் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரதமர் நரேந்திரமோடிதான் பா.ஜ.க.வின் ஒரே தலைவராக காட்சியளிக்கிறார். தோல்வியால் தனது நடவடிக்கையை மோடி மாற்றிக் கொள்வாரா என்று பார்க்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
டி.ராஜா
இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. டி.ராஜா, ”பிகார் சட்டமன்றத் தேர்தல் முடிவு நரேந்திர மோடியின் தோல்வியைக் காட்டுகிறது. பிரதமர் மோடி மீதான மக்களின் எண்ணமாக தேர்தல் முடிவை பார்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மதவாத அரசியலை மக்கள் நிராகரித்துள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.
சத்ருகன் சின்ஹா
நடிகரும், பாராளுமன்ற உறுப்பினரும், பா.ஜ.க.வின் நட்சத்திர பிரசாரகருமான சத்ருகன் சின்ஹா தனது ட்விட்டரில், ”மக்களின் தீர்ப்புக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். இது ஜனநயகத்துக்கும், பிகார் மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும். இந்த வெற்றியின் மூலம் ‘பிஹாரியா? (பிகாரைச் சேர்ந்தவருக்கா), பஹாரியா? ‘வெளியில் இருந்து வந்தவருக்கா)’ என்ற பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்ட” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், மற்றொரு ட்விட்டர் செய்தியில், இந்த தோல்வியில் இருந்து பா.ஜ.க, பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.