தீபாவளியன்று திருமகளின் அருளைப் பெற, குபேர பூஜை செய்வதுமுண்டு. லஷ்மி கடாட்சத்தை அருளும் குபேரனுக்கு, ராஜாதிராஜன் என்கிற பெயரும் உண்டு. மகாலட்சுமியின் அஷ்ட நிதிகளில் சங்க நிதி, பதும நிதி இருவரும் இவருடைய இருபக்கங்களில் வீற்றிருப்பார்கள். சிவனை வழிபட்டதன் பயனாக வட திசைக்கு அதிபதியாகும் பேற்றினைப் பெற்றவர் இவர். குபேரனை வழிபடுவதால் தனலட்சுமி, தைரியலட்சுமி அருளைப் பெறலாம்!
தீபாவளி நன்னாளில் தொடங்கப்படும் வேலைகள் வெற்றிகரமாக அமையும்; நல்ல வளமும் செல்வமும் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. வட இந்தியாவில் வாழும் வணிகப் பெருமக்கள், தீபாவளியன்று மகாலட்சுமியை வணங்கிப் புதுக்கணக்கைத் துவக்குவார்கள். நண்பர்களை அழைத்து அன்பளிப்புகளையும் வழங்குவார்கள். தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் வாழும் வட இந்தியர்களிடமும் இப்பழக்கம் காணப்படுகிறது.