அடியேன் சில நேரங்களில் நினைப்பதுண்டு – அடியேன் செய்யும் சொற்ப கைங்கர்யங்களை மனத்தளவில் பெரியதாக நினைத்துக் கொண்டு மகிழ்ந்து கொள்வேன். அடியேனின் இந்த அகந்தையை தீர்க்கும் பொருட்டோ என்னவோ, எம்பெருமான் திருவுள்ளம் கொண்டு , கைங்கர்யங்கள் என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை சமீபத்தில் அடியேனுக்கு உணர்த்தினார். ஆம். அதன் காரணமாகவோ அடியேனை திருக்கண்ணமங்கைக்கு , சில அடியார்கள் மூலம் அழைத்தார்.
“ அடியார்ந்த வையமுண்டு * ஆலிலை அன்ன வசஞ்செய்யும் * படியாதுமில் குழவிப் படி * எந்தை பிரான் தனக்கு * அடியார் அடியார் தம் அடியார் அடியார் * தமக்கு அடியார் அடியார் தம் * அடியார் அடியோங்களே * “ என்பது ஆழ்வாரின் வாக்கு.
அப்படி அவர் சொன்னபடியான விதத்திலே தங்களை முழுவதுமாக, எம்பெருமான் கைங்கர்யத்துடன், எம்பெருமான், ஆழ்வார், ஆச்சார்யர்களின் உற்சவத்தின் பொருட்டு , திவ்ய தேஸங்களுக்கும் , புண்ணிய ஸ்தலங்களுக்கும் வரும், அடியார்களுக்கும் கைங்கர்யங்கள் செய்யும் விதமாக ஈடுபடுத்திக் கொண்டு , அவர்கள் நடந்து கொண்டவிதத்தை, அடியேனின் அகக் கண்களால் கண்ட பொழுது, அடியேன் உண்மையிலேயே வெட்கப்பட்டேன். அதன் காரணமாக அடியேனின் மமதை எண்ணமும் அழிந்தது என்றே சொல்ல வேண்டும்.
அப்படி என்னதான் கைங்கர்யங்கள் அவர்கள் செய்தார்கள் ?
இன்று ஒரு சில திவ்ய தேஸங்கள் தவிர்த்து, பல திவ்ய தேஸங்களுக்கு அருளிச் செயல் கோஷ்டி சாதிப்பதற்கோ அல்லது நித்யபடி க்ரமங்கள் நடப்பதற்கோ வழியின்றி உள்ளது. பல பக்தர்கள் மட்டுமல்லாது, நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்தவர்கள் கூட, குறிப்பிட்ட சில திவ்ய தேஸங்களுக்கு செல்வதை மட்டுமே, வழக்கமாகக் கொண்டுள்ளனர். மேலும் அந்த திவ்ய தேஸங்களுக்கு, ஸேவார்த்திகள் மட்டுமின்றி, பல வழிகளில், பல முக்கிய பிரமுகர்களால் , பணமும், பொருளும் கிடைக்கப் பெருகின்றன. அவைகள் முழுவதும் அந்த திருக்கோயிலின் பல உற்சவங்களுக்குப் போக , மிகையான அளவில் மேற்கொண்டு செலவு செய்ய முடியாத அளவிற்கு சேமிக்கப்பட்டு, வேறு வைகையில் கையாளப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் , பல திவ்யதேஸங்கள், நிர்வகிக்கப் படுவதற்குக் கூட பணமோ, பொருளோ இல்லாத நேரத்தில், அந்த திவ்ய தேஸங்களில் எந்த விதமான உற்சவங்களும் நடைபெற வழில்லாமல் போய்விடுகின்றன.
இதனை உணர்ந்த வேளுக்குடி ஸ்ரீ. கிருஷ்ணன் ஸ்வாமிகள் போன்ற சில பெரிய மஹான்கள் , தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் பெரும் பகுதியை , சில திவ்ய தேஸங்களுக்கு, அளித்து அங்கு உற்சவங்களும், தினப்படி க்ரமங்களும் நடக்க வழி வகுத்துக் கொடுத்துள்ளனர். இருந்தும் மேலும் பல திவ்ய தேஸங்கள் இன்றும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது. இப்படியான சில திவ்ய தேஸங்களில் , அங்குள்ள அறங்காவலர்களின் அனுமதி பெற்று சில உற்சவங்கள் நடத்திக் கொடுக்கும் வாய்ப்பை, பல அன்பர்களிடம் இருந்து நங்கொடை பெற்று, அந்த வருமானத்தின் மூலம் “ வரவர முனி ட்ரஸ்ட் “ செய்து வருகின்றனர்.
அந்த ட்ரஸ்டின் முக்கிய பிரமுகர்களில் இருவர் செய்யும் கைங்கர்யங்களை, சமீபத்தில், திருக்கண்ணமங்கையில், ஸ்ரீ.மணவாள மாமுனிகளின் அவதார உற்சவத்தின் போது , நேரில் கண்டரியும் வாய்ப்பினை, மேலே சொன்னவிதத்தில் , அடியேனுக்கு உணரும் வகையில் எம்பெருமான் அருளினார்.
அருளிச் செயல் கோஷ்டிக்கு வருபவர்களை, ட்ரஸ்ட் மூலம், அழைத்துச் சென்றனர். திருக்கோவலூர் ஜீயர் ஸ்வாமிகள் அப்படி வரும் ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்குவதற்கு ஒரு இடம் கொடுத்துள்ளார். அந்த அகத்தின் அடியோங்கள் தங்கும் பொழுது, அங்கு ததியாராதனம் உட்பட பல கைங்கர்யங்களை செய்து வருகின்றனர். சிறிதும் சலிப்பின்றி, எந்நேரமும் உழைத்துக் கொண்டே இருக்கின்றனர்.
அடியார்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுப்பது மட்டுமின்றி, அவர்களின் எந்த ஒரு சிறிய விருப்பத்தையும் நிறைவேற்றிக் கொடுக்கின்றனர். தங்கள் குடும்பத்தை பற்றியோ, மற்ற தங்களின் தனிப்பட்ட பொருப்புகளைப் பற்றியோ சிறிதும் எண்ணம் கொள்ளாமல், எம்பெருமான், ஆழ்வார் , ஆச்சாரியர்கள் மற்றும் அடியார்களைப் பற்றியே அவர்களின் சிந்தனையும், செயல்களும் உள்ளன.
ஒரு பக்கம் உற்சவத்திற்கு தேவையான எதனையும், அங்குள்ள அர்ச்சகர்கள் ஆலோசனைகளைக் கேட்டு அதனையும், அதே நேரத்தில் அருளிச் செயல் கோஷ்டிக்கு வந்தவர்களின் சகல வசதிகளையும் , ததியாராதனையின் போது, அவர்களே பரிமாறியது மட்டுமின்றி, மேலும் பல பல கைங்கர்யங்களை செய்கின்றனர். அதனை எங்கே குறிப்பிட முடியாத நிலையில் அடியேன் உள்ளேன். காரணம் , அவர்கள் செய்யும் கைங்கர்யங்களைக் கண்டு மனம் நெகிழ்ந்த அடியேன், அதனைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு எழுதி அதனை முகநூலில் பதிவிடப் போகிறேன் என்று சொல்லி, அவர்களின் அனுமதியைக் கேட்டேன். அதற்கு அவர்கள் தாங்கள் செய்வது எம்பெருமானுக்கும், ஆழ்வார், ஆச்சாரியர், மற்றும் அடியார்களுக்குமான கைங்கர்யமே என்றும் , இது மிகச் சாதாரணமான ஒன்றுதான் என்றும், அடியேன் குறிப்பிடுவது போல் ஒன்றும் புகழ்ச்சிக்கு உறியது அல்ல என்றும் கூறினர். ஆனால் அடியேனின் தொடர் வற்புறுத்தல் காரணமாக, தங்களைப் பற்றி பெரிதாக ஒன்றும் குறிப்பிட வேண்டாம் என்றும், தாங்கள் செய்வது எம்பெருமானுக்கான கைங்கர்யமே அன்றி, விளம்பரத்துக்கான செய்கை அல்ல என்று கேட்டுக் கொண்டதன் காரணமாக , அவர்களின் பல கைங்கர்யங்களை குறிப்பிட முடியாத சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு பல, பல முக்கிய கைங்கர்யங்களை இங்கே குறிப்பிடவில்லை.
அதுசரி, இவ்வளவு எழுதிய அடியேன் அவர்கள் யார் என்று இதுவரை சொல்லவில்லையே. சரி, இப்பொழுது குறிப்பிடுகிறேன். அவர்கள் “ வரவரமுனி ட்ரஸ்டை” சேர்ந்த கைங்கர்யபரர்களான திருமெய்யம். திரு.சுந்தரராமன் ஸ்வாமி அவர்களும், சிங்கப்பெருமாள் கோயில் / திருத்தேரி.ஸ்ரீ.கிருஷ்ணன் ஸ்வாமி அவர்களும் ஆவர்கள்.
அவர்களுக்கும், வரவரமுனி ட்ரஸ்டுக்கும் அடியேனின் மிக்க வந்தனம்.