உலக அழகி போட்டியில் பங்கேற்க பிரபல அழகிக்கு விசா மறுக்கப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்
சீனாவுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கனடாவில் வாழும் சீன வம்சாவளி பெண்ணுக்கு உலக அழகி போட்டியில் பங்கு பெற விசா மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சீனாவை பூர்வீகமாக கொண்ட அனஸ்டாசியா லின் என்ற இளம்பெண், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது பெற்றோருடன் கனடாவுக்குக் குடிபெயர்ந்தார். கனடாவில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வரும் இவர் கனடிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மனித உரிமை ஆர்வலராக நடித்து வந்தார்.
குறிப்பாக சீனாவில் நடந்த மனித உரிமை பிரச்சினைகள் குறித்த கதாபாத்திரங்களில் அனஸ்டாசியா லின் நடித்ததால் அவர் மீது சீனா ஏற்கனவே கடும் ஆத்திரத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டிற்கான கனடா நாட்டு அழகியாகத் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்வு செய்யப்பட்ட அனஸ்டாசியா லின், விரைவில் சீனாவில் நடக்கவிருக்கும் உலக அழகிப்போட்டியில் கனடாவின் சார்பில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தார்.
ஆனால் சீனாவுக்கு எதிராகச் செயல்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் இருந்த நிலையில், அவருக்கு தற்போது விசா வழங்க சீன அதிகாரிகள் மறுத்துள்ளனர். இதுகுறித்து கனடாவில் உள்ள சீன தூதரகத்தில் அனஸ்டாசியா லின் புகார் அளித்துள்ளார்.