பூக்கள் என்றாலே நறுமணத்தையும், மனதுக்கு புத்துணர்வையும் கொடுக்கும். பூக்களை பார்த்தாலே மனம் அமைதியாகும். பூக்கள் காலை, மாலை இரவு என பல்வேறு கால நிலைகளில் பூக்கும் தன்மை கொண்டது. இதில் மாலையில் சந்திரனை கண்டவுடன் பூக்கும் தன்மை கொண்டது அல்லி.
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நீர் நிரம்பிய குளம், குட்டை தானாகவே வளரும். இதன் இலைகள் மலர்கள் நீரில் மிதக்கும். இதன் காம்புகள் நுண்ணியகுழல் கொண்ட தண்டுகளாக இருக்கும். இதில் வெள்ளை, சிவப்பு, கருநீலம் என மூன்று வகையாக காணப்படும். நிறத்தால் வேறுபட்டு இருந்தாலும் குணத்தால் ஒன்றாகவே அமைந்திருக்கும்.
ஆல்பம், குமுதம், கைவரம், என்று பல்வேறு பெயர்களால் அழைக்கபடும் அல்லியானது குளிர்ச்சி தன்மை கொண்டது. வெள்ளல்லியால் மேகம், நீர் புழையின் புண், நீரிழிவு நீர்வேட்கை, உட்சூடு ஆகியவை விலகும். செவ்வல்லியால் வெப்பத்தை உண்டாக்கும் கண்ணோய்கள், இரத்தச்சூடு, முதலியவை நீங்கும். செவ்வல்லியின் இதழ்களை கைப்பிடி அளவு எடுத்து 350 மிலி தண்ணீர் விட்டு 100 மிலியாக சுண்டியவுடன் 50 மிலி வீதம் காலை, மாலை குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
அல்லி இதழ்களை சேகரித்து அதனுடன் 200மிலி தண்ணீர்விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் காலையில் குடித்து வர நீரிழிவு நோய் கட்டுப்படும் அல்லி இலைகளை பறித்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ள வேண்டும். இதில் 5கிராம் அளவில் பசும்பால் அல்லது தேனில் குழைத்து சாப்பிட அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவை தடுக்கலாம். சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும் இவர்கள் வெள்ளை அல்லி இதழ்களை கைப்பிடி அளவிற்கு எடுத்து 150மிலியாக சுண்டியவுடன் இரவு படுக்கும் முன்பாக குடித்து வந்தால் எரி்ச்சல் நீங்கி நீர் பிரியும்.
அல்லிக்கிழங்கை உலர்த்தி்ப்பொடித்து 5கிராம் வீதம் காலை, மாலை பாலில் கலந்து குடித்து வந்தால் குடற்புண், வயிற்றுபோக்கு, மூலம் ஆகியவை குணமாகும். பெண்கள் கருவுற்றிருக்கும் போது மாத விலக்கு ஏற்படும். இவர்கள் இந்த சூரணத்தை பசும்பாலில் கலந்து குடித்தால் குணமாகும். அடிக்கடி ஏற்படும் தாகம் தணிய அல்லி இதழ்களை கொதிக்க வைத்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் மூன்று நாட்களில் நாவறட்சி நீங்கும். சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது சிறுநீரில் ரத்தம் சீழ்வரும்.
இவர்கள் 200கிராம் வெள்ளை பூவின் இதழ்களை 6லிட்டர் தண்ணீரில் போட்டு ஊறவைத்து அந்த தண்ணீரை வடித்து 30மிலி வீதம் காலை, மாலை குடித்து வந்தால் குணமாகும். கருநெய்தல் என்று அழைக்கப்படும் கருநீல அல்லியின் பூ 50 கிராம் எடுத்து 250 மிலி தண்ணீரில் போட்டு 125 மிலியாக சுண்டக்காய்ச்சி வடிகட்டி அதில் 30கிராம் சர்க்கரை சேர்த்து காய்ச்சினால் தேன் பதம் வரும். அதை வெளிச்சம் புகாத பாட்டிலில் வைத்து கொண்டு காலை, மாலை 15மிலி சாப்பிட மூளைக்கொதிப்பு தணியும், கண் குளிர்சியடையும் இதய படபடப்பை தணிக்கும்.
கண் நரம்புகளில் நீர்கோர்த்து பல்வேறு கண்நோய்களால் துன்பப்படுவோர் செவ்வல்லியின் இதழ்களை நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொண்டு மூன்று விரல்களால் எடுத்து தேன் கலந்து காலை மாலை சாப்பிட்டு வந்தால் கண் தொடர்பான நோய்கள் நீங்கும். நீல அல்லியில் உள்ள மகரந்த பொடிகளை நிழலில் காயவைத்து தண்ணீரில் காய்ச்சி குடித்தால் உடல் எரிச்சல், ரத்த மூலம், பெரும்பாடு நீங்கும்.