ஹார்ட் டிஸ்க் பயன்படத் தொடங்கிய சில வாரங்களில் அல்லது மாதங்களில், அதில் பேட் செக்டார் எனப்படும் கெட்டுப் போன பகுதிகள் ஏற்படும். இதில் டேட்டா எதுவும் எழுதப்பட மாட்டாது.
இதனை விண்டோஸ் சிஸ்டமே அறிந்து அதற்கான ஏற்பாட்டினைச் செய்து கொள்ளும். இதற்கான காரணம் என்ன? எதனால் இவ்வாறு ஏற்படுகிறது? இவை ஏற்படாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு பார்க்கலாம்
ஹார்ட் ட்ரைவில் ஒரு பேட் செக்டார் (bad sector) என்பது, நாம் டேட்டா ஸ்டோர் செய்யும் இடத்தில் சிறிய பழுதான இடம் ஆகும். இந்த இடத்தில் எந்த டேட்டாவினையும் எழுதவோ, அதிலிருந்து படிக்கவோ முடியாது.
பேட் செக்டார் என்பது, நாம் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் காந்த சக்தியில் இயங்கும் ஹார்ட் ட்ரைவ்களிலும் ஏற்படலாம்; தற்போது பழக்கத்திற்கு வந்து கொண்டிருக்கும் சாலிட் ஸ்டேட் ட்ரைவ்களிலும் உருவாகலாம்.
பழுதான பகுதிகள் என இவற்றை அழைக்கலாம். இவை இரண்டு வகைப்படும். முதலாவது, சாதனப் பாதிப்பு வழியாக ஏற்படுவது. இரண்டாவது சாப்ட்வேர் புரோகிராம்களினால் ஏற்படுவது. இரண்டாவது வகையினைச் சரி செய்திடலாம்.
ஆனால், முதல் வகையில் பழுது ஏற்பட்டால், அதனைச் சுற்றி வேலி போன்ற டிஜிட்டல் தடையை அமைத்து, பயன்படுத்துவதிலிருந்து ஒதுக்கி வைக்கலாம்.
பேட் செக்டார் வகைகள்: இரண்டு வகையான பேட் செக்டார்கள் உள்ளன. இவற்றை “physical” and “logical” bad sectors என அழைக்கின்றனர். அல்லது சிலர் “hard” and “soft” எனவும் அழைக்கின்றனர்.
இவற்றில் முதலாவது வகையானது, (physical – or hard – bad sector) நேரடியான பாதிப்பில் ஏற்படுவது. ஹார்ட் ட்ரைவின் எழுதும் முனை, அந்தப் பகுதியில் தொட்டு பழுதினை ஏற்படுத்தி இருக்கலாம். சிறு தூசி அந்த இடத்தில் அமர்ந்து, இடத்தைப் பாழாக்கி இருக்கலாம்.
சாலிட் ஸ்டேட் டிஸ்க்கில், குறிப்பிட்ட செல் பயன்படுத்தும் வாழ்நாள் காலத்தினை இழந்திருக்கலாம்.இது போன்ற பழுதுகளைச் சரி செய்திட முடியாது.
இன்னொரு வகையான logical – or soft – bad sector என்பது, குறிப்பிட்ட அந்த பகுதி செயல்படாமல் இருப்பது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் அந்தப் பகுதியில் உள்ள டேட்டாவினைப் படிக்க முயன்று, பின் பழுதினை நீக்கும் தன் குறியீடுகள் அதனுடன் ஒத்துப் போகாமல் இருப்பதனைக் கண்டறிந்து, அங்கு ஏதோ பிரச்னை இருப்பதை அறிந்து உணர்த்துவதாகும்.
இந்த பகுதி பேட் செக்டார் எனக் குறிக்கப்படும். இதனை, அந்தப் பகுதியில் ஜிரோஸ் எழுதுவதன் மூலம் சரி செய்துவிடலாம். முன்பு இதனை குறுகிய அளவில் பார்மட் செய்து சரி செய்து வந்தனர். விண்டோஸ் சிஸ்டம் கொண்டிருக்கும் Disk Check டூல், இத்தகைய பழுதுகளை சரி செய்திடலாம்.