ராஜஸ்தானில் ஒரு சசிபெருமாள். மதுவுக்கு எதிராக போராடி உயிரிழந்தார்.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த கோரி கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சிகளும், சமூகநல அமைப்புகளும் போராடி வந்தன. இந்த போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் தனது உயிரையே இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சசிபெருமாளை போலவே ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒருவர் மதுவுக்கு எதிராக போராடி தனது உயிரை இழந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜனதா தள் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏவான குருசரண் என்பவர் கடந்த அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து மதுவுக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை ஆரம்பித்தார். 65 வயதான இவர் கடந்த வாரம் உடல்நிலை பாதிக்கப்பட்டு ராஜஸ்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், கோமா நிலைக்கு சென்ற குருசரண், தற்போது உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. குருசரண் மறைவிற்கு பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் மதுவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
English Summary: A Sasi Perumal like figure in Rajasthan dies after hunger fast to ban liquor.