துருக்கியில் இன்று ஜி-20 மாநாடு. பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்
மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக இங்கிலாந்து சென்றுள்ள பாரத பிரதமர் நரேந்திரமோடி, இன்று இங்கிலாந்து பயணத்தை முடித்து கொண்டு துருக்கியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா உள்ளிட்டவை அங்கம் வகிக்கும் ஜி-20 கூட்டமைப்பு நாடுகளின் மாநாடு இன்றும் நாளையும் துருக்கியில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், சீன அதிபர் ஜீ ஜிங்பிங், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஆனால் பாரிஸில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கான தனது பயணத்தை பிரான்ஸ் அதிபர் ஹொலாந்த் ரத்து செய்துள்ளார்.
இந்த மாநாட்டில் சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் குறித்தும், போர் காரணமாக அந்நாட்டு மக்கள் அகதிகளாக வெளியேறுவதால் எழும் குழப்பங்கள் குறித்தும், பாரீஸில் நடத்தப்பட்ட வெறித்தனமான தாக்குதல் குறித்தும் முக்கிய விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய பிரதமர் மோடி, பயங்கரவாதங்களுக்கு எதிராக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கறுப்புப் பண விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary: