ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதி குன்ஹாவிடம் அதிமுக மேயர் மன்னிப்பு
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் டி’குன்ஹா அவர்களின் தீர்ப்பை கண்டித்து வேலூர் அதிமுக மேயர் கார்த்தியாயினி தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் ஒருவர் கர்நாடக ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக ஐகோர்ட்டில் நேரில் ஆஜரான மேயர் கார்த்தியாயினி, ‘நீதிபதி குன்ஹாவை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும், மேலும் பகிரங்க மன்னிப்புக் கோரி கன்னட செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடுவதாகவும் கூறினார். எனவே கர்நாடக ஐகோர்ட் தன்னை மன்னித்து, இவ்வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேயரின் வேண்டுகோளுக்கு மனுதாரரின் வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவிக்காததை அடுத்து, தீர்ப்பு கூறிய நீதிபதி, ‘மேயர் கார்த்தியாயினி மன்னிப்பு கோரியதை ஏற்றுக்கொண்டு இவ்வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. அதே வேளையில் கன்னட செய்தித்தாள்களில் வெளியாகும் மன்னிப்பு தொடர்பான விளம்பரத்தை சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார். இதனால் இந்த வழக்கு முடிவுக்கு வந்தது.