பிரான்ஸை அடுத்து அமெரிக்க விளையாட்டு மைதானத்திலும் துப்பாக்கி சூடு. 16 பேர் படுகாயம்
சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் கால்பந்து மைதானத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் நேற்று அமெரிக்காவின் விளையாட்டு மைதானம் ஒன்றில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதில் 16 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள நியூ ஓர்லியான்ஸ் என்ற நகரில் பன்னிஃப்ரெண்ட் பார்க் என்ற விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் நேற்று மாலை ஒரு இசை வீடியோவுக்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. இதை வேடிக்கை பார்க்க சுமார் 500 பேர் மைதானத்தில் கூடியிருந்தபோது, திடீரென மர்ம நபர்கள் சிலர் கூட்டத்தை நோக்கி சரமாரியாக நவீனரக துப்பாக்கியால் சுட்டனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் படு காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள யுனிவர்சிட்டி மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கி சூட்டை 2 மர்மநபர்கள் நடத்தியதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க போலீஸார் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.