பாதுகாப்பு இல்லை என்றும் கருதும் முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள். அசாம் கவர்னர்
கடந்த சில மாதங்களாக சிறுபான்மையினர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களை இந்து அமைப்புகளும் பாஜக தலைவர்களும் தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தற்போது அரசியல் கட்சியை சாராத அசாம் ஆளுநர் பிபி ஆச்சார்யா சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அசாம் தலைநகர் கெளஹாத்தியில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த கவர்னர் பிபி ஆச்சார்யா, “உலகிலேயே மிகவும் சகிப் புத்தன்மை மிகுந்த நாடு இந்தியா மட்டுமே. இங்குள்ள ஒவ்வொரு முஸ்லீம்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதையும் மீறி இங்கு தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதும் முஸ்லிம்கள் தங்கள் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.
பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டனர். அதுபோல பாகிஸ்தான் நாட்டிற்கோ அல்லது வங்கதேச நாட்டிற்கோ செல்ல விரும்புகிறவர்கள் தாராளமாக செல்லலாம்” என்று கூறியுள்ளார்.
ஒரு அரசியல்வாதி போல மாநில கவர்னர் ஒருவர் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.