சைவ சித்தாந்தத்தைச் தேசமெங்கும் பரவச் செய்த சந்தானக் குரவர்களுள் தலைசிறந்தவர் மெய்கண்டார். இவர் அருளிய நூல் சிவஞானபோதம் ஆகும். மெய்கண்ட சாத்திரநூல்கள் பதினான்குள் இந்நூலே தலைசிறந்த நூலாகும்.
அச்சுதகளப்பாளரின் மனக்குறை
திருநாவுக்கரசு சுவாமிகளுக்குச் சூலக்குறியும், இடபக்குறியும் இறைவனால் பொறிக்கப் பெற்ற தலம் திருப்பெண்ணாகடம். அத்தலத்தில் அச்சுதகளப்பாளர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்குப் பல செல்வங்கள் இருந்தும் குழந்தைச் செல்வம் இல்லை. இக்குறை நீங்கத் தம் குலகுருவாகிய சகலாகம பண்டிதரை வேண்டினார். குருவின் உபதேசத்தின்படி திருமுறைகளை வணங்கி ஐந்தெழுத்தை ஓதி, திருமுறையில் கயிறு சாத்திப் பார்த்தார். அதில் சம்பந்தரின் திருவெண்காட்டுப் பதிகப்பாடல் வந்தது. “பேயடையா…” எனும் அப்பாடலில் மகப்பேறு கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி அவர் திருவெண்காடு சென்று அங்குள்ள முக்குள நீரில் மூழ்கி இறைவனை வழிபட்டு வந்தார்.
மகப்பேறு அருளிய மாகேசன்
அச்சுதகளப்பாளர், திருவெண்காட்டில் தங்கியிருந்த போது அவர் கனவில் இறைவன் தோன்றினார். “உனக்கு இப்பிறப்பில் புத்திரப்பேறு இல்லை. ஆயினும் தேவாரப் பதிகத்தை முழுமனதுடன் பாடி வழிபட்டமையால், அத்தேவாரம் தந்த சம்பந்தனைப் போன்ற ஒரு மகனை உனக்குத் தந்தோம்” என்றருளி மறைந்தார். திருவெண்காட்டுப் பெருமான் அருளியவாறு ஓர் ஆண் மகன் பிறந்தான். அதனால் அப்பெருமான் பெயராகிய “சுவேதவனப் பெருமான்” என்ற பெயரையே சூட்டினார்.
குருவருள் பெற்ற குழந்தை
அச்சுதகளப்பாளர் தம் மகனைச் சிறப்பாக வளர்த்து வந்தார், அப்போது சுவேதவனரின் தாய் மாமனாகிய “காங்கேய பூபதி” குழந்தையைத் திருவெண்ணெய் நல்லூருக்கு எடுத்துச் சென்று வளர்த்தார். சுவேதவனருக்கு இரண்டு வயது நிரம்பியது. அப்போது பரஞ்சோதி முனிவர் திருக்கயிலையி லிருந்து பொதிய மலைக்கு ஆகாய மார்க்கமாகச் சென்று கொண்டிருந்தார். திருவெண்ணை நல்லூருக்கு மேலே வந்தபோது விமானம் தடைப்பட்டது. கீழே இறங்கி வந்த பரஞ்சோதியார் ஞானக்குழந்தையாகிய சுவேதவனரைக் கண்டார். அவருக்கு முப்பொருள் உண்மையை உபதேசித்து, குருவாகிய சத்தியஞான தரிசினிகளின் பெயரைக் குழந்தைக்குத் தமிழில் “மெய்கண்டார்” என்று சூட்டியருளினார்.
சிவஞான போதம் அருளல்
மெய்கண்டார் சிவஞானபோதம் எனும் சிவஞான நூலை பன்னிரெண்டு சூத்திரங்களால் அருளிச் செய்தார். சைவசித்தாந்தப் பேருண்மைகளைப் புலப்படுத்தும் நூல் இதுவாகும். இந்நூலுள் ஐம்புலவேடர்களால் (மெய், வாய், கண், மூக்கு, செவி) பிணிக்கப்பட்டுள்ள உயிர் இறைவனுக்கு உரியது எனும் கருத்தை மெய்கண்டார், அழகுபடச் சொல்லியுள்ளார்.
“ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு
அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே”
எனும் சிவஞான போதச் சூத்திரம் மூலம் அதனை அறியலாம்.
மெய்கண்டார் குருபூஜை
மெய்கண்ட சுவாமிகள் ஐப்பசித் திங்கள் சுவாதி நன்னாளில் சிவானந்த பெருவாழ்வு பெற்று வீடுபேறு அடைந்தார். இவரது சமாதித் திருக்கோயில் திருபெண்ணாகடத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் ஆளுகையின் கீழ் உள்ளது. இங்கு ஐப்பசி-சுவாதியில் இவரது குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.