மூன்று வேளை உணவை சாப்பிடும் நாம் கூடவே நொறுக்குத்தீனிகளையும் எடுத்துக்கொள்கிறோம்.
சிலர் உணவை குறைத்து நொறுக்குத்தீனிகளை அதிகமாக எடுத்துக்கொள்வார்கள், இதன் காரணமாக உடல்பருமன், ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம்.
நொறுக்குத்தீனிகள்
சிலர் கடைகளில் வாங்கிசாப்பிடுவதை விட வீட்டில் செய்தது சாப்பிட்டால் எவ்வித உடல் உபாதைகளும் ஏற்படாது என்று நினைக்கிறார்கள்.
ஆனால், அதிரசம், லட்டு, முறுக்கு போன்ற நொறுக்குத்தீனிகளை தேவையற்ற நேரங்களில் சாப்பிட்டால், இவை கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும், மேலும் கார்போஹைட்ரேட்டையும் அதிகரிக்கும்.
கடைகளில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் உணவுகளில் வேதியல் பொருட்கள், உப்புகள், பதப்படுத்திகள், நிறமூட்டிகள் போன்றவை கலக்கப்பட்டிருப்பதால், இவற்றை உண்ணும்போது பல வகையான ஹார்மோன் பிரச்னைகள் வருகின்றன. அதில் மிக முக்கியமானது சர்க்கரை நோய் ஏற்பட வழிவகுக்கிறது.
எண்ணெயில் பொரித்த சிக்கன், பிரைட் ரைஸ் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவதன் காரணமாக, உணவுக்குழாய் பகுதியில் புற்றுநோய் ஏற்படுவது சர்வசாதாரணமாகிவிட்டது.
நொறுக்குத்தீனிக்கு பதில் என்ன சாப்பிடலாம்?
ஆரோக்கியமான சரிவிகித உணவு கலந்த உணவுப்பழக்கம், காலை உணவைக் கட்டாயம்சாப்பிடுவது, நேரத்துக்கு உணவை உண்பது போன்றவை நொறுக்குத்தீனிகளின் தேவையைக் குறைக்கும்.
வாயில் எதையாவது அரைத்துகொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறவர்கள், பொட்டுக்கடலை, பொரி, பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் வகைகளைச் சாப்பிடலாம்.
பொதுவாக, ஒரு நாளைக்கு 95 சதவிகிதம் உணவை உட்கொள்ள வேண்டும்; 5 சதவிகிதம் மட்டுமே நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்ளலாம்.
ஓர் உணவு வேளைக்கும், இன்னோர் உணவு வேளைக்கும் இடையில் பழச்சாறு அருந்தலாம். பழச்சாறு அருந்துவதன் மூலம் நொறுக்குத்தீனி சாப்பிடும் உணர்வைக் குறைக்கலாம்.
மாலை வேளைகளில் சுண்டல், பயறு வகைகள், முளைகட்டிய பயறுகள் போன்றவற்றைச் சாப்பிடலாம்.
கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் போன்றவை நல்லவையே. எனினும், வெல்லம், எண்ணெய், கடலை, எள் போன்றவை ஒன்று சேரும்போது கலோரி அதிமாகிவிடும். எனவே, இவற்றையும் எப்போதாவது சாப்பிடுவதே சிறந்தது.
பேரீச்சம்பழம், திராட்சை, வாழைப்பழம் போன்றவற்றைச் சாப்பிடலாம், மேலும் ப்ரூட் சாலட் செய்து சாப்பிடலாம்.