உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஜெயலலிதா உள்ளே போவது உறுதி. ராமதாஸ்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஜெயலலிதா உள்ளே போவது உறுதி. ராமதாஸ்

ramdossபாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற 2016 மாற்றத்திற்கான வரைவு தேர்தல் அறிக்கை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ”அரசியல் நன்கு தெரிந்த மக்கள் வாழ்கின்ற மாவட்டம் தஞ்சாவூர். வெற்றிலை, சீவலை போட்டுகிட்டு உலக அரசியல், உள்நாட்டு அரசியல் பேசக்கூடியவர்கள் இந்த மாவட்டத்துக்காரர்கள். இலவச அரிசி கொடுத்து அவர்களை இந்த இரு கட்சிகளும் பிச்சைக்காரர்களாக ஆக்கிவிட்டார்கள். மன்னிக்க முடியுமா? வரும் தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லக்கூடிய, கேட்கக்கூடிய தகுதி இருக்கிறதா? எதை சாதித்தார்கள், என்ன சாதித்தார்கள் இவர்கள் கேட்பதற்கு.

நம் ஒவ்வொருவரின் பெயரில் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கி வைத்திருப்பதுதான் மிச்சம். இதுதான் வளர்ச்சியா? அதனால்தான் மாற்றம் வேண்டுமென நாங்கள் கேட்கிறோம். நாட்டை சீரழித்து சின்னாப்பின்னமாக ஆக்கிவிட்டார்கள். ஜெயலலிதா 22 நாள் சிறை 100 கோடி அபராதம், இன்னொருவர் தப்பு கணக்கு போட்டு விடுதலை. அந்த வழக்கு இப்போ உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறது. தீர்ப்பு வரும்போது உள்ளே போவது உறுதி.

தி.மு.க.விற்கு 2ஜி வழக்கு. அதில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து வெளியில் வந்த ராசா, கனிமொழிக்கு பிளக்ஸ் வைத்து வரவேற்பு அளித்ததை பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது. என்னைபோல இன்னும் நிறையபேர் சிரித்திருப்பார்கள். என்னமோ ஐ.நா.வில் பேசிவிட்டு வந்தவர்கள் போல பிளக்ஸ் வைத்திருக்கிறார்கள். ஊழலை கற்றுக்கொடுத்துவர் கருணாநிதி. அந்த பக்கம் சசிகலா குரூப் எல்லா தியேட்டர்களையும் வாங்கி விட்ட்ராகளாம். இன்னும் ஒரு இடத்தை மட்டும்தான் அவர்கள் வாங்கவில்லை அந்த இடம் என்னன்னு தெரியுமா? அதுதான் கடல். இதற்கெல்லாம் முடிவுகட்டத்தான் நாங்கள் மாற்றம் வேண்டுமென உங்களிடம் கேட்கிறோம்.

மாறறத்திற்கான வரைபடம் எங்களிடம் இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு, ஒரு பைசாகூட ஊழல் இல்லாத நிர்வாகம். விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம். வேலைதேடி வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டம் சென்றவர்கள் சொந்த மாவட்டத்தில் தொழில் செய்ய வாய்ப்பு. இதையெல்லாம் தரக்கூடிய ஒரே யங் டயனமிக் லீடராக உங்களுக்காக இருக்கிறார் அன்புமணி ராமதாஸ். மாற்றம் முன்னேற்றம் மட்டுமே எங்களது மந்திரச்சொல்.

என்னை பார்த்து ஜாதி கட்சியா என்று கேட்கிறார்கள். நான் ஜாதியை சொல்லி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. 35 ஆணடுகால அரசியல் வாழ்க்கையில் மக்களுக்காகவும், இந்த மண்ணுக்காகவும் நிறைய போராட்டங்களை நடத்தியிருக்கிறேன்.

தி.மு.க கூட்டணியில் இருக்கும்போது, அந்த கட்சி தவறு செய்யும்போதெல்லாம் பிடிபிடின்னு பிடிப்பேன். அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும்போது அந்த அரசை சுட்டிக்காட்டி வாங்குவாங்குன்னு வாங்குவேன். இந்த ரெண்டு கட்சிகளையும் தண்டிப்பதற்கு ராமதாஸை விட்டால் வேறு ஆள் இல்லை. வாஜ்பாய் ஆட்சியில் 6 ஆண்டுகள் மத்தியில் பங்காற்றியிருக்கிறோம், மன்மோகன் சிங் ஆட்சியில் 5 ஆண்டுகள் மக்கள் பணியாற்றி இருக்கிறோம். அப்போ நாங்க கொண்டு வந்த 108 ஆம்புலன்ஸ் என்ன ஒரு ஜாதியினருக்காகவா கொண்டு வந்தோம். ஜாதி ஜாதின்னு யாரெல்லாம் எங்களை சொல்லுகிறார்ளோ, அவர்கள்தான் ஜாதி வெறிபிடித்து அலைகிறார்கள்.

அப்புறம்… ஆண்டி தலித் என்று சொல்கிறார்கள். யார் நானா அதை திருமாவளவனிடம் கேளுங்கள். மரம் வெட்டுகிறவன் என்கிறார்கள். ராமதாஸ் யார் தெரியுமா? மாற்றத்தத்தைத்தான் இந்த பிரபஞ்சம் கண்டு வருகிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்களுக்காகவே துவங்கப்பட்டது. ஆனால், இப்போது அதன் இடத்தை அபகரித்து வருகிறது அரசு. தமிழ்நாட்டில் செம்மொழி காவலர்கள் இருக்கிறார்கள். என்ன செய்தார்கள் தமிழுக்காக. ஜெயலலிதாவிற்கு தமிழை பற்றி தெரியாது. நான்தான் தமிழ் இல்லாத விளம்பர போர்டுகளை கறுப்பு மை கொண்டு அழித்தேன். மக்கள் தொலைக்காட்சி துவக்கி, அதில் தமிழில் செய்தி வாசிக்க வைத்தவன் நான்தான் என்பதை மறந்து விடாதீர்கள். ஆகையால், தமிழகத்தில் மாற்றம், முன்னேற்றம் வேண்டும்” என்றார்.

Leave a Reply