இளங்கோவன் – விஜயதாரிணி மோதல் உச்சகட்டம். காங்கிரஸில் பெரும் பரபரப்பு
தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் தற்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் விஜயதாரிணிக்குமான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இளங்கோவனை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விஜயதாரிணி தரப்பும், விஜயதாரிணியை கட்சியில் இருந்தே நீக்க வேண்டும் என 49 காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இமெயில் மூலம் சோனியா காந்திக்கும், ராகுல்காந்திக்கும் இளங்கோவன் மீது கடும் குற்றச்சாட்டை விஜயதாரிணி கூறியுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள 61 காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களில் 49 மாவட்டத் தலைவர்கள் விஜயதாரணிக்கு எதிராக கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் ”நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த ஓராண்டாக கட்சிக்கு புத்துணர்ச்சி வழங்கும் வகையில் செயலாற்றி வருகிறார்.
கட்சியில் உள்ள சிலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளங்கோவனிடம்,விஜயதரணி முறையிட்ட விதத்தை எவருமே ஏற்க முடியாது. இதன் அடிப்படையில், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் இளங்கோவன் மீது காவல் நிலையத்துக்குச் சென்று கிரிமினல் புகார் கொடுத்ததைவிட கட்சி விரோத நடவடிக்கை எதுவும் இருக்க முடியாது.
எதற்கும் கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் விஜயதரணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்க வேண்டும். இந்த ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்குக் காரணமான விஜயதரணி உள்ளிட்டவர்கள் மீது சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.