ஆண்டுக்கு ஒருமுறை இடம் பெயரும் குரு பகவானின் அருள் நமக்கு அந்த ஓராண்டுக்குதான். ஆனால், குரு மகான்களின் அருளோ, வாழ்நாள் முழுவதும் தொடரும். அத்தகைய மகான் தரிசனம் இங்கே-
காஞ்சி காமகோடி ஆசார்ய பரம்பரையில் ஐம்பத்தொன்பதாவது பீடாதிபதியாக விளங்கியவர் பகவன் நாம போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். ஒரு மடாதிபதியாக காஞ்சிபுர மடத்தில் அவர் தங்கியிருந்த காலத்தைவிட வெளியே பயணித்து, நாம ஜப மேன்மையைப் பரப்பிய காலமே அதிகம் என்று சொல்லலாம். நாம பஜனை சம்பிரதாயத்தின் முதல் குரு என்று போற்றப்படுவர் அவர். புராணம் போற்றும் புண்ணிய நகரம் காஞ்சிபுரத்தில், மண்டனமிஸ்ரர் அக்ரஹாரத்தில் வசித்து வந்தவர் கேசவ பாண்டுரங்கன். ஆந்திர தேசத்தில் இருந்து காஞ்சிக்கு வந்து குடியேறியவர். அவருடைய மனைவியின் பெயர் சுகுணா. இந்தத் தம்பதிக்கு 1638ல் ஆதிசங்கர பகவத்பாதரின் அம்சமாக போதேந்திரர் அவதரித்தார்.
குழந்தை பிறந்த வேளையை வைத்து, அதன் எதிர்காலத்தையும் சிறப்பு அம்சங்களையும் கணித்த பாண்டுரங்கன், புருஷோத்தமன் என்று பெயர் சூட்டினார். அப்போது காஞ்சி காமகோடி மடத்தில் 58வது பீடாதிபதியாக விளங்கிய ஆத்மபோதேந்திரர் என்கிற விஸ்வாதிகேந்திரா சரஸ்வதி ஸ்வாமிகளிடம் உதவியாளராக இருந்து வந்தார் பாண்டுரங்கன். ஒரு நாள், தந்தை மடத்துக்குப் புறப்படும்போது, நானும் வருவேன் என்று அடம் பிடித்தான் ஐந்தே வயதான புருஷோத்தமன், சரி என்று அவனையும் கூட்டிக்கொண்டு ஸ்ரீமடத்துக்குச் சென்றார். பீடத்தில் இருந்த ஸ்வாமிகளைக் கண்டதும். பக்தி உணர்வு மேலிட, எவரும் சொல்லாமல் தானாகவே நமஸ்காரம் செய்தான் பாலகன் புருஷோத்தமன்.
விளையும் பயிரின் சாதூர்யம், ஒரு வேதவித்துக்குத் தெரியாமல் இருக்குமா? ஸ்வாமிகள், புருஷோத்தமனைப் பார்த்து புன்னகைத்தார். ஸ்வாமிகள் முன் கைகூட்டி, வாய் பொத்தி நின்றிருந்தது குழந்தை. பாண்டுரங்கனைப் பார்த்து ‘இந்தக் குழந்தை யாருடையவன்?’ என்று கேட்டார் ஸ்வாமிகள். ‘தங்களுடைய பரிபூரண ஆசீர்வாதத்தோடு பிறந்த இந்தக் குழந்தையும் தங்களுடையதே’ என்று பவ்யமாக பதிலளித்தார் பாண்டுரங்கன். ‘நம்முடையது என்று நீர் சொல்வதால், இந்தக் குழந்தையை நமக்கே விட்டுத்தர முடியுமா?’ ஸ்வாமிகள் அழுத்தமாக் கேட்டார்கள்.
யதேச்சையாக, தான் சொன்ன வார்த்தைகளின் முழுப்பொருள் அப்போதுதான் பாண்டுரங்கனுக்குப் புரிந்தது. சற்றுத் தடுமாறினார். வாய் தவறி வார்த்தைகளை உதிர்த்துவிட்டோமோ என்று ஐயப்பட்டார். இருந்தாலும், அந்த வார்த்தைகள் வெளிப்பட்டதும் இறைவனின் சங்கல்பமே என்று தீர்மானித்தார். ஸ்வாமிகளைப் பணிந்து ‘தங்களுடைய விருப்பமே என் விருப்பமும்’ என்றார். இதைக்கேட்டு சந்தோஷப்பட்ட ஸ்வாமிகள், ‘நல்லது. இன்றைய தினத்தில் இருந்து மடத்தின் குழந்தையாகவே புருஷோத்தமன் பாவிக்கப்படுவான். தைரியமாகச் செல்லுங்கள்,’ என்றார். கணவரின் இந்தச் செயலைக் கேள்விப்பட்ட மனைவி சுகுணா கலங்கவில்லை.
பகவானின் விருப்பம் அதுவானால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று தன்னையும் தேற்றிக்கொண்டு கணவரையும் தேற்றினாள். மடத்தில் வளர்ந்தாலும் தினமும் பெற்றோரைச் சந்தித்து நமஸ்கரித்து ஆசி பெறும் உயரிய வழக்கத்தைக் கொண்டிருந்தான் புருஷோத்தமன். ஐந்து வயதில் அட்சராப்பியாசம்; ஏழு வயதில் உபநயனம், பதினாறு வயது முடிவதற்குள் வேதம், வேதாந்தம் போன்றவற்றைத் திறம்படக் கற்றுத் தேர்ந்தான். சகலத்திலும் உயர்ந்தது நாராயணன் நாமமே என்று தெளிந்த புருஷோத்தமன், தினமும் ஒரு லட்சத்து எட்டாயிரம் ராம நாமத்தை ஜபிப்பதாக, ஆசார்யார் சந்நதியின் முன் சங்கல்பம் எடுத்துக்கொண்டான். (அதன்பின் கடைசிவரை இதைத் தவறாமல் கடைப்பிடித்தும் வந்தார்).
அடுத்தடுத்து வந்த காலகட்டத்தில் புருஷோத்தமனின் பெற்றோர், ஒருவர் பின் ஒருவராக இறைவனின் திருப்பாதம் அடைந்தனர். நாளாக நாளாக புருஷோத்தமனின் தேஜஸும், பவ்யமும் கூடிக் கொண்டே வந்தன. ஆசார்ய பீடத்தில் அமர்வதற்கு உண்டான அத்தனை தகுதிகளும் புருஷோத்தமனுக்கு இருப்பதாகப் பெருமைப்பட்டுக் கொண்டார் விஸ்வாதிகேந்திரர். உரிய காலம் வந்ததும் அவனைப் பீடத்தில் அமர்த்தி அழகு பார்க்க விரும்பினார் ஸ்வாமிகள். அதற்குரிய வேளையும் வந்தது. ஒரு தினம் விஸ்வாதிகேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பக்தி மார்க்கத்தைப் பரப்பும் பொருட்டு காசி யாத்திரை புறப்பட்டார். அப்போது புருஷோத்தமனும் உடன் வருவதாகச் சொன்னார். ‘‘காசியில் சில காலம் தங்க உத்தேசித்துள்ளேன்.
எனவே, நீ இப்போது என்னுடன் வர வேண்டாம். சிறிது காலத்துக்குப் பிறகு புறப்பட்டு வா,’’ என்றார் ஸ்வாமிகள். புருஷோத்தமனும் ஸ்வாமிகளைப் பிரிய மனம் இல்லாமல் ஒப்புக்கொண்டான். ஸ்வாமிகள் காசியை அடைந்தார். அப்போது, ந்ருஸிம்மாச்ரமி ஸ்வாமிகள் என்னும் மகான் காசி க்ஷேத்திரத்தில் தங்கி, பகவன் நாமங்களைப் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். இருவரும் சந்தித்து உரையாடி, ஆன்மிக விவாதங்களை மேற்கொண்டனர். அப்போது, சங்கீர்த்தன வைபவங்கள் அதிக அளவில் காசியில் நடந்ததைப் பார்த்து ஸ்வாமிகள் பெருமிதம் கொண்டார். இந்த அளவுக்குத் தென்னாட்டில் நாம சங்கீர்த்தனம் வளர வேண்டுமானால் அது புருஷோத்தமனால்தான் முடியும். விரைவிலேயே அவனுக்கு மடாதிபதி பட்டம் சூட்டவேண்டும் என்று முடிவெடுத்தார்.
குருநாதரின் பிரிவைத் தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் தன் நண்பனுடன் காசிக்கு யாத்திரை சென்றான் புருஷோத்தமன். அங்கே புருஷோத்தமனைப் பார்த்த மாத்திரத்தில் பெருமகிழ்வு கொண்டு, அவனை அணைத்து சந்தோஷப்பட்டார் ஸ்வாமிகள். இருவரும் காஞ்சிபுரம் திரும்பிய பின், ஒரு சுபதினத்தில் புருஷோத்தமனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து, காஞ்சி மடத்தின் பீடாதிபதியாக ஆக்கினார் ஸ்வாமிகள். அப்போது புருஷோத்தமனுக்கு ஸ்வாமிகளால் சூட்டப்பட்ட திருநாமமே போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அதன்பின் பல இடங்களுக்கு யாத்திரை சென்று நாம ஜபத்தின் பெருமைகளைப் பலருக்கும் போதித்தார் போதேந்திரர். ஏராளமான கிரந்தங்களை இயற்றினார். விளக்கவுரைகள் எழுதினார்.
கோவிந்தபுரத்தில் போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இருந்த இடத்துக்கு அருகில்தான் காவிரி நதி! கோடை அல்லாத காலங்களில் கொப்பளித்துக் கொண்டும் சுழித்துக் கொண்டும் ஓடும் அந்த நதியின் அழகை ரசிப்பதற்கும் அங்கே கூடும் சிறுவர்களுடன் விளையாடுவதற்காகவும் காவிரிக் கரைக்கு அடிக்கடி செல்வார் ஸ்வாமிகள். மணற் பகுதியில் இருந்த குழி ஒன்றுக்குள் தான் இறங்கிக்கொண்டு மேலே மணலைப் போட்டு மூடுமாறு சிறுவர்களிடம் கூறினார் ஸ்வாமிகள். சிறுவர்கள் ஆனந்தமாக மணலை அள்ளிப் போடுகிற நேரம் பார்த்து, ‘‘ஏ பசங்களா! என் மேல் மணலை அள்ளிப் போட்டு மூடிவிட்டு, நீங்கள் அனைவரும் வீட்டுக்குப் போய்விட வேண்டும். வீட்டில் எவரிடமும் இந்த விஷயத்தைச் சொல்லக்கூடாது. நாளை பொழுது விடிந்ததும் இங்கே வந்து என்னைப் பாருங்கள்,’’ என்றார்.
ஸ்வாமிகள் விளையாடுகிறார் என்று நம்பிய அந்த அப்பாவிச் சிறுவர்கள் போட்டி போட்டுக்கொண்டு. குழிக்குள் மணலை நிரப்பினார்கள். ஸ்வாமிகளது உருவம் மறைந்துவிட்டது. மறுநாள் காலை தங்களது அன்றாட அலுவல்களின் பொருட்டு ஸ்வாமிகளைத் தேடினர் அவரது சிஷ்யர்கள். ஆசி பெற வேண்டி ஊர் மக்கள் ஸ்வாமிகளைத் தேடி வந்தனர். இப்படிப் பலரும் ஸ்வாமிகளைத் தேடிக் கொண்டிருக்க… அவரைக் காணவில்லை என்கிற தகவல் பரவியதும் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். ஸ்வாமிகளுடன் ஆற்றங்கரையில் அடிக்கடி விளையாடும் சிறுவர்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள் பெரியோர்கள். அப்போதுதான், முந்தைய தினம் நடந்த சம்பவத்தின் வீரியம் அந்தச் சிறுவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது.
கண்களில் நீர் கசிய ஸ்வாமிகளின் மேல் மணலைப் போட்டு மூடிய விவரத்தைத் தேம்பித் தேம்பிச் சொன்னார்கள். சீடர்களும் ஊர்க்காரர்களும் பதறிப்போய் ஆற்றங்கரைக்கு ஓடினார்கள். சிறுவர்கள் அடையாளம் காட்டிய இடத்தில், மேடாக இருந்த மணலைக் கைகளால் விலக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் அசரீரி வாக்கு ஒன்று எழுந்தது. ‘‘பக்தர்களே! நாம் இந்த இடத்திலேயே ஞானமயமான சித்த சரீரத்தில் இருந்துகொண்டு ஜீவன் முக்தராக விளங்குவோம். அதோடு, உலக நன்மைக்காக பகவன் நாம சங்கீர்த்தனம் செய்துகொண்டே இருப்பதால், நமக்கு எந்தத் தொந்தரவும் செய்ய வேண்டாம். தோண்டுவதை நிறுத்துங்கள்.
இதற்கு மேலே பிருந்தாவனம் ஒன்றை அமைத்துத் தினமும் ஆராதித்து வாருங்கள். ஒவ்வொரு நாளும் லட்சத்துக்கு எட்டாயிரம் நாம ஜபம் செய்கிற பக்தர்களுக்கு நாம் தரிசனம் தருவோம்,’’ என்று அந்தக் குரல், ஸ்வாமிகளின் மொழியாக ஒலித்தது! இந்த அசரீரி வாக்கைக் கேட்ட அவருடைய பக்தர்களும் சீடர்களும் அதற்கு மேல் தோண்டாமல் மண்ணைப் போட்டு மூடி விட்டார்கள். அவர் மீது கொண்ட குருபக்தி காரணமாக சில பக்தர்கள். ஆற்று மணலில் விழுந்து தேம்பி தேம்பி அழுதனர். இன்னும் சிலரோ, நாம சங்கீர்த்தனம் செய்யத் தொடங்கினர். ஸ்வாமிகள் நிரந்தரமாகக் குடிகொண்ட இடத்தில் அவரது அசரீரி வாக்குப்படியே ஒரு துளசி மாடம் அமைத்து, மகா அபிஷேகம் நடத்தி, தினமும் நாம சங்கீர்த்தனம் செய்து வந்தனர் அவரது பக்தர்கள்.
ஆற்றங்கரை மணலுக்குள் ஸ்வாமிகள் ஐக்கியமான தினம் கி.பி.1692ம் வருடம் புரட்டாசி மாதம் பவுர்ணமி. இப்போதும் ஸ்வாமிகளின் அதிஷ்டானத்தில் பவுர்ணமியில் ஆரம்பித்து. மகாளய அமாவாசை வரை பதினைந்து நாட்கள் ஆராதனை உற்சவம் பாகவதர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இங்கு வந்து குவிகிறார்கள். ஜீவசமாதியில் இருந்துகொண்டு போதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இன்றைக்கும் நாமம் ஜபித்துக்கொண்டு தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்கு அருள்கிறார். அவரது அதிஷ்டானத்தில் இருந்து வரும் அவரது ராம நாம குரலை இன்றைக்கும் கேட்க முடிகிறது என்கிறார்கள்.