வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள சென்னை மக்களுக்கு பிஎஸ்என்எல் சலுகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஒரு கார காலத்துக்கு சென்னை வாடிக்கையாளர்கள் அழைக்கும் அழைப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. முற்றிலும் இலவசமாக இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் இந்த காலகட்டத்தில் கட்டணம் செலுத்த முடியாதவர்கள், பின்னர் செலுத்தலாம். இதற்காக எந்த அபராத கட்டணமோ, சேவை துண்டிப்போ செயப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது செல்போன் மற்றும் லேண்ட் லைன் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும் என்று பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
2 நாளாக தொடர் மின்தடை, செல்போன் இணைப்புகளும் முடக்கம்:
சென்னையில் பெய்து வரும் கனமழையினால் பெரும்பாலான இடங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மின்தடை செய்யப்பட்டது. இதேபோல், செல்போன் இணைப்புகளும் (நெட்வொர்க்) தற்காலிகமாக முடங்கியது. இதனால், பொதுமக்கள் தகவல் பரிமாறிக் கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி, சைதாப்பேட்டை, திருவான்மியூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கிண்டி தொழிற்பேட்டை, பழவந்தாங்கல், நங்கநல்லூர், நீலாங்கரை, பாலவாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் 2 நாட்களாக மின்தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், இரவில் மெதுவர்த்தியை ஏந்தியும், எமர்ஜென்சி விளக்குகளையும் பயன்படுத்தினர்.
மேலும், பல முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களின் இணைப்புகளின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் கனமழையில் சிக்கி தவிக்கும் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக்கொள்ள முடியாமல் கடும் அவதிப்பட்டனர். போதிய அளவில் பல்வேறு இடங்களில் மின்சார வசதிகள் இன்மையால் வங்கிகள், ஏடிஎம் சேவைகள் மற்றும் தபால்சேவையும் முடங்கியது.