சென்னைக்கு கூடுதல் மீட்பு வீரர்களை களத்தில் இறக்கத் தயார்: ஓ.பி.சிங்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 800 பேர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் தேவைப்பட்டால் கூடுதல் வீரர்களை களத்தில் இறக்கத் தயார் நிலையில் இருப்பதாக அதன் தலைமை இயக்குனர் ஓ.பி.சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளை கடந்த முறை மழை வெள்ளம் சூழ்ந்தபோது மீட்பு நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முக்கிய பங்கு வகித்தனர். இந்நிலையில் மீண்டும் பெய்த கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் மறுபடியும் தனித் தீவாகித் தத்தளிக்கின்றன.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 800 வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 30 குழுக்களாக பிரிந்து சென்று 110 படகுகளை பயன் படுத்தி மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேவைப்பட்டால் கூடுதல் வீரர்களை களம் இறக்கத்தயார் நிலையில் இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைமை இயக்குனர் திரு.ஓ.பி சிங் தெரிவித்துள்ளார்