வட தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எப்) சார்பில் இதுவரை மீட்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட அதன் இயக்குநர் ஜெனரல் ஓ.பி.சிங் சென்னை வந்துள்ளார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர் களை மீட்கும் பணியில் என்டிஆர்எப் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் வீரர்கள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை 5 மணி வரை வெள்ளத்தில் சிக்கியிருந்த 11,000-க்கும் மேற்பட்டவர்களை இக்குழுவினர் மீட்டுள்ளனர். இத்துடன் சென்னையில் மூவரின் உடல்களையும் பிற பகுதிகளில் இருவரின் உடல்களையும் இவர்கள் மீட்டுள்ளனர்.
வட தமிழகத்தில் ஏற்கெனவே 30 குழுக்கள் பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் பஞ்சாபின் பதிண்டாவில் இருந்து மேலும் 5 குழுக்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. நேற்று மாலை புனேவில் இருந்தும் 5 குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. பிஹாரின் பாட்னாவில் இருந்தும் 4 குழுக்கள் சென்னை செல்ல தயார் நிலையில் உள்ளன.
இது குறித்து ‘தி இந்து’விடம் தேசிய பேரிடர் மீட்புப் படையின் நிர்வாகப் பிரிவு டி.ஐ.ஜி. ஜே.கே.எஸ்.ரவாத் கூறும்போது, “சென்னையில் தற்போது மழை குறைந்துள்ளதால் வெள்ள நீர் வேகமாக வடியத் தொடங்கியுள்ளது. இதனால் மீட்பு எண்ணிக்கையும் அதிகமாகி உள்ளது. மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு தீவிரப் படுத்த எங்கள் இயக்குநர் ஜெனரல் அரக்கோணம் சென்றுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் எங்கள் மீட்புக் குழுவில் மருத்துவர்கள் தயாராக உள்ளனர். தேவைக்கு ஏற்ப இந்த மருத்துவக் குழுக்களையும் அதிகரிப்போம். பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க இதுவரை எங்களிடம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படவில்லை. அப்படி கொடுத்தால் அதையும் சேர்க்க எங்கள் குழுவினர் தயாராக உள்ளனர். ஒவ்வொரு நாள் மாலையும் எங்கள் படையினர் கூடி அன்று மேற்கொண்ட பணிகள் குறித்தும் மறுநாள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்துகின்றனர்” என்றார்.
என்டிஆர்எப் படையினருக்கு டெல்லியில் இருந்து சென்றுள்ள செயல்பாடுகள் பிரிவின் டிஐஜி எஸ்.எஸ்.புலேரியா மற்றும் தென் பிராந்திய டிஐஜி செல்வன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். பிஹாரில் ஒவ்வொரு ஆண்டும் நேபாள வெள்ளம் புகுவதால் அங்கு மீட்புப் பணி செய்து வரும் என்டிஆர்எப் படையினருக்கு சென்னை பணியில் அதிக சிரமம் இல்லை என்றே கருதப்படுகிறது. இப்படையினருக்கு இங்குள்ள மக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதால், மீட்புப் பணி மிகவும் எளிதாக இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே நேற்று காலை இரண்டாவது நாளாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் அவசரகால துயர்துடைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குழுவின் தலைவரான மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ராணுவம், உணவு, ரயில், விவசாயம், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளுடன் தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம், இந்திய வானிலை மையம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றின் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.