டெல்லியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பதிவு எண் அடிப்படையில் குறிப்பிட்ட நாளில் மட்டுமே கார்கள் அனுமதி

delhi_jam_2646108f

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் வாகன பதிவு எண் அடிப்படையில், குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே கார்களை அனுமதிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, ஒற்றைப்படை எண்ணில் முடியும் கார்கள் ஒரு நாளிலும் இரட்டைப்படை எண்ணில் முடியும் கார்கள் அடுத்த நாளிலும் அனுமதிக்கப் படும்.

இந்த முறை அடுத்தடுத்த நாட்களில் மாறிமாறி நடைமுறைப்படுத்தப்படும். வெளி மாநிலங்களிலிருந்து வரும் கார்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். எனினும் பொது போக்குவரத்து வாகனங்களுக்கு இது பொருந்தாது.

என்டிபிசி நிறுவனத்துக்கு சொந்தமாக தெற்கு டெல்லியில் உள்ள பாதர்பூர் மின் உற்பத்தி நிலை யத்தை மூடவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் குறித்த தகவலை தெரிவிக்க செயலியை உருவாக் கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள ஒட்டுமொத்த கார்களின் எண்ணிக்கையைவிட டெல்லியில் உள்ள கார்கள் எண்ணிக்கை அதிகம் என கூறப்படுகிறது. இதுதவிர, சராசரியாக தினமும் 1,000 கார்கள் விற்பனையாகின்றன.

இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவில் “டெல்லியில் மாசு அளவு அபாயகரமாக உள்ளது. இது ‘காஸ்’ அறைக்குள் வசிப்பது போன்றதாகும். எனவே, இதைத் தடுக்க மத்திய அரசும், டெல்லி அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply