இப்போது டெங்கு காய்ச்சல், அதிகமாகப் பேசப்படாத எலிக்காய்ச்சலுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் விழிப்புடன் இருக்கும் இந்த சமயத்தில் மக்களும் விழிப்புடன் இருப்பது அவசியம். லெப்டோஸ்பைரோசிஸ் என்ற மருத்துவப் பெயர் கொண்ட எலிக்காய்ச்சல் மனிதர்களையும், விலங்குகளையும் தொற்றும் நோய். இந்த தொற்று, விலங்குகளிடம் இருந்து, குறிப்பாக எலிகள், வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள், தெரு நாய்கள் இவற்றின் சிறுநீர் மூலம் பரவுகிறது.
மழைக் காலங்களில் இவற்றின் சிறுநீரும், சாக்கடைத் தண்ணீரும், மழைநீருடன் கலந்து வருவதால் மக்களுக்கு இந்த நோய் தொற்ற வாய்ப்புள்ளது. மனிதர்களுக்கு வெட்டுக்காயங்கள், புண்கள் வழியே இந்த நோய் பரவும். ஒருவரிடம் இருந்து, ஒருவருக்கு இந்த நோய் பரவுவது அரிது என்றாலும், மனிதர்களின் சிறுநீருடன் தொடர்பு ஏற்பட்டால் இந்த நோய் தொற்றிக்கொள்ள வாய்ப்புண்டு. அதாவது கழிவறையில் பாதிக்கப்பட்ட நோய் உள்ளவரின் சிறுநீரை அறியாமல் மிதிப்பதன் மூலம் இந்த நோய் தொற்றிவிடுகிறது.
இப்போது பெய்த மழை வெள்ளத்தாலும், கழிவுகள் கலந்த நீர் தேக்கத்தாலும், மழைநீர் வெளியேற முடியாத நிலையில் இந்த தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. அதிகமான தலைவலி, சோர்வு, உடல் வலி, பசியின்மை, மூட்டுவலி, வாந்தி வருவது போன்ற உணர்வு, தண்ணீர் அதிகம் குடிப்பது, உடல் இயக்க சோர்வு போன்றவை இதற்கான அறிகுறிகள் ஆகும்.
இந்த நோய் ரத்தத்திலும், நிணநீர்க்கணு, சிறுநீரகத்திலும், கணையத்திலும் ஏற்பட வாய்ப்புண்டு. சிலசமயம் இதற்கான அறிகுறிகள் இருப்பதில்லை அல்லது தாமதமாகத் தோன்றலாம். இது சரிவரக் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால் பாதிப்பு ஏற்படலாம். இந்த காய்ச்சல் பொதுவாக டெங்கு, மலேரியா, டைபாய்டு, வைரஸ் ஜுரம் போன்றவற்றோடு ஒத்துப் போவதால் மருத்துவர்கள் இவற்றுக்கான சோதனைகளைத்தான் முதலில் மேற்கொள்கிறார்கள்.