அமைதியான படுக்கையறைக்கு ஐந்து வண்ணங்கள்

[carousel ids=”77745,77746,77747,77748,77749″]

படுக்கையறை அமைதியாகவும், சொகுசானதாகவும் இருக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். அதற்காக நீங்கள் விலை மதிப்பான கட்டில், மெத்தைகள் வாங்க வேண்டும் என்றில்லை. இந்த விருப்பத்தைச் சரியான வண்ணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் எளிமையாக நிறைவேற்ற முடியும். படுக்கையறை என்பது களைப்பிலிருந்து உங்களை விடுவிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு வண்ணங்களின் பங்கு மிக மிக அவசியம். கட்டில் விரிப்பாக இருக்கட்டும்; சுவராக இருக்கட்டும் எல்லாவற்றுக்கும் வண்ணம் அவசியம். வண்ணங்கள் மாயம் செய்யக்கூடியவை.

நிம்மதியான படுக்கையறையை உருவாக்கச் சாம்பல், நீலம், பச்சை, செவ்வூதா போன்ற வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வண்ணங்கள் மன அழுத்தம், கவலை போன்ற பிரச்சினைகளைக் குறைக்க உதவும். அத்துடன், உங்கள் படுக்கையறைக்குப் பிரம்மாண்ட தோற்றத்தையும் கொடுக்கும்.

அடர் சாம்பல்-நீலம் (Dark grey-blue)

படுக்கையறையின் பிரதான சுவருக்கு ஏற்றது அடர் சாம்பல்-நீலம். அறைக்குள் அமைதியான அதிர்வலைகளை உருவாக்க இந்த நிறம் பெரிதும் உதவும். இந்த நிறத்தை உங்கள் அறைக்குத் தேர்ந்தெடுக்கும்போது ஒரு பெரிய கலைப்பொருளையும் கூரையில் பொருத்துவதற்குச் சேர்த்துத் தேர்ந்தெடுங்கள். அடர் சாம்பல்-நீலமாய் இருப்பதால் அறைக்குள் வெளிச்சம் ஊடுருவுவதற்காக வெள்ளை நிறத்தையும் பயன்படுத்த வேண்டும். அதனால், கூரையில் வெள்ளை நிறத்தை அடிக்கலாம். அத்துடன், வெள்ளை நிற மெத்தைகள், தலையணைகள், தரைவிரிப்புகள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

மென்-சாம்பல் (Soft grey)

மென்மையான வண்ணங்களை விரும்புபவர்கள், மென் சாம்பல் நிறத்தைப் படுக்கையறைக்குத் தேர்ந்தெடுக்கலாம். பிரதான சுவர், மென் சாம்பல் நிறத்தில் இருப்பதால், கூரையில் வெள்ளை நிறத்துடன் சாம்பலையும் கலந்து அடிக்கலாம். இதனால் அறைக்குக் கூடுதல் அடர்த்தி கிடைக்கும். இந்த அறையில் பொருட்களை அடர்-சாம்பல், மற்றும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கலாம்.

பனிக்கட்டி நீலம் (Icy Blue)

இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தும்போது வீட்டுக்குள் நிம்மதியை எளிமையாகக் கொண்டுவரலாம். அந்த வகையில், வான் நீல நிறத்தைப் படுக்கையறைக்குத் தேர்ந்தெடுக்கலாம். அதிலும் மென் நீலமாகத் தேந்தெடுப்பது கூடுதல் அழகைப் படுக்கையறைக்குக் கொடுக்கும். பனிக்கட்டி நீலமும் அறைக்கு நடுநிலையான தோற்றத்தைக் கொடுக்கும். அத்துடன், பனிக்கட்டி நீலத்துடன் எந்த நிறத்தையும் இணைக்கலாம். சாக்லெட் பிரவுன், சாம்பல் போன்ற நிறங்களுடன் இணைப்பது ஏற்றதாக இருக்கும்.

மென் பச்சை (Soft green)

அமைதிக்கும், மனநிறைவுக்கும் மென் பச்சை ஏற்றது. இந்த நிறத்தையும் நடுநிலை (neutral) டோனில் படுக்கையறைக்குப் பயன்படுத்தலாம். இந்த நிறத்தை மரப்பொருட்களுடன் பயன்படுத்தலாம்.

லாவண்டர்

மென் லாவண்டர் நிறமும் படுக்கை யறைக்குப் பொருத்தமாக இருக்கும். இந்த நிறத்துடன், அடர் சாம்பல், கறுப்பு, வெள்ளை போன்ற நிறங்களையும் சேர்த்து அறையில் பயன்படுத்தலாம். ஊதாவின் எல்லா நிறச் சாயல்களும் மன அழுத்தத்தைக் குறைக்கும். இந்த நிறத்துக்குப் பொருந்தும்படி, தரைவிரிப்புகளைச் சாம்பல் நிறத்தில் தேர்ந்தெடுக்கலாம்.

Leave a Reply