டிசம்பர் 24-ல் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடங்குமா?
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடைபெறுவது சில நாட்களுக்கு முன்பு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட நிலையில் வரும் டிசம்பர் 24ஆம் தேதி போட்டிகள் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நிலவிய பதட்டம் காரணமாக கடந்த சில வருடங்களாக இரு நாடுகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற பருவநிலை மாற்றம் குறித்த உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
அதன் பயனாக தற்போது இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் சென்றுள்ளார். இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே இருந்த பதட்டம் குறைந்துள்ளது. எனவே விரைவில் இரு நாடுகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகளும் கூட்டாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அரசு இந்த வாரத்தில் அனுமதி கொடுத்தால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் இலங்கையில் டிசம்பர் மாதம் 24-ந்தேதி தொடங்கி ஜனவரி மாதம் 5-ந்தேதி வரை நடைபெற வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
English Summary: India vs Pakistan Series: Fate of the series likely to be decided today