வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடுகள். 50க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் ஆலோசனை
தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருந்தாலும் சென்னை மற்றும் கடலூர் இந்த வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களில் பெரும்பாலானோர் வீடுகளை இழந்துள்ள நிலையில் இவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர தொண்டு நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\
தற்போது மழை நின்று, வெள்ள நீரும் ஓரளவுக்கு வடிந்து, மின்சாரமும் சீரடைந்துள்ள நிலையில் பொதுமக்களுக்கு அடுத்த கட்ட நடவடிக்கையாக தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேற்று சென்னையில் ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த தன்னார்வ அமைப்பு, தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரத் தீர்வாக, வீடு கட்டித் தருவது என்றும் அதற்கான பணிகளில் இணைந்து ஈடுபடுவது என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விரைவில் வீடு இழந்தவர்கள் குறித்த கணக்கெடுப்பு எடுத்து வீடுகளை கட்டித்தரவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.