முதல்வரின் அலட்சியத்தால் ஏற்பட்ட பேரிடர். விசாரணை கமிஷன் தேவை. கவர்னரிடம் கருணாநிதி மனு
செம்பரப்பாக்கம் ஏரியை திறக்க தாமதமாக முடிவெடுத்த்தால் நூற்றுக்கணக்கான மனித உயிர்கள் பலியானதாகவும் கோடிக்கணக்கான பொருள் சேதம் ஏற்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை செய்ய விசாரணை கமிசன் அமைக்க வேண்டும் என்றும் தமிழக கவர்னரிடம் திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்
இதுகுறித்து தமிழக ஆளுநர் ரோசையாவை நேரில் சந்தித்து திமுக தலைவர் கருணாநிதி மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ”அண்மையில் சென்னை மாநகரைச் சீரழித்த, முன்னெப்போதும் கண்டிராத வெள்ளம், ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் அலட்சியமான, கவனமற்ற, மக்கள் விரோத நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக மிகப்பெரும் எண்ணிக்கையிலான, துரதிர்ஷடவசமான அப்பாவி மக்களின் உயிரிழப்பும், ஏராளமான உடைமைகளின் இழப்பும் ஏற்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு குறித்து வல்லுநர்களின் முன்னறிவிப்பும், உரியகால எச்சரிக்கைகளும் இருந்தும் கூட, உள்வரும் தண்ணீரைக் கொள்வதற்கும், எதிர்பார்க்கப்பட்ட மழையைச் சமாளிக்கவும் ஏதுவாக, ஏரியிலிருந்து படிப்படியாக நீரை வெளியேற்ற பொதுப் பணித்துறை நிர்வாகத்தினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
நீர்மட்ட அளவினைப் பராமரிப்பதிலும், கொள்ளளவு மட்டத்தை மேலாண்மை செய்வதிலும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மெத்தனப் போக்கால், 1.12.2015 அன்று அதிகாலை 5.00 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள் கண்மூடித்தனமாகத் திறக்கப்பட்டு, 33,500 கன அடி நீர், ஏற்கனவே முன்பு வெளியேற்றப்பட்ட நீர் மற்றும் இதர நீர் நிலைகளிலிருந்து திறந்து விடப்பட்ட நீர் ஆகியவற்றால் பெருக்கெடுத்து ஓடிய நீர் அடையாறு ஆற்றில் திறந்து விடப்பட்டது. ‘அடையாறு ஆற்றில் ஒரு லட்சம் கன அடி நீர் பாய்ந்து கொண்டிருந்தது’ என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலைதான் சென்னையின் பல பகுதிகளை மூழ்கடித்தது.
இதைவிட அதிர்ச்சியானது என்னவென்றால், காவல்துறையின் வழக்கமான செயல்பாட்டு முறைகள் முற்றிலுமாக அலட்சியப்படுத்தப்பட்டு விட்டன. உள்ளூர் மக்களை எச்சரிக்கை செய்ய காவல்துறை தவறிவிட்டது. பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, காவல்துறை ஆகியவற்றுக்கிடையில் ஒருங்கிணைப்பு இருக்கவில்லை. இதன் விளைவாக மாநகரம் முழுவதும் அதன் புறநகர்ப் பகுதிகளும் சொல்லொணாத் துயருக்கும், சங்கடங்களுக்கும் உள்ளாக்கப்பட்டதுடன், கடந்த ஒருவார காலமாக மின்சாரம் இல்லை. பெட்ரோல் டீசல் ஆகியவற்றிற்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி, டீசல் கிடைக்காததால் தொலைத்தொடர்பு சேவை அமைப்புகள் அறவே செயல்படவில்லை. தெருக்களில் பிணங்கள் மிதந்தன. ஏராளமானோர் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறி அவர்களுடைய சொந்த மாநகரிலேயே அகதிகளாயினர். மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், இயல்பு நிலையை மீட்பதிலும் மாநில நிர்வாகம் முற்றிலும் தவறிவிட்டது.
இத்தருணத்தில் நாங்கள் திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருநெல்வேலி, காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் இதர பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கடும் மழையால் பயிர்கள், உயிர்கள், உடமைகள் ஆகியவற்றுக்கு மிகப் பெருமளவில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்தும் நாங்கள் கவலைப்படுகிறோம். இதற்குப் போதுமான இழப்பீடு வழங்கப்படவேண்டும்.
12.2015க்கு இரண்டு நாட்கள் முன்பே, வரவிருக்கும் ஆபத்து குறித்து பொதுப் பணித்துறையால் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும், பின்னர் அடையாறு ஆற்றில் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து மிகப்பெருமளவில் நீரைத் திறந்து விடுவதற்கு முன்பே படிப்படியாக, கட்டம் கட்டமாக மதகுகளைத் திறந்துவிட அனுமதி கோரப்பட்டது என்றும் நாங்கள் அறிகிறோம். அச்செய்தியினை பொதுமக்களும் உணருகிறார்கள்.
தலைமைச் செயலாளரும், அவரது மற்ற துறைகளின் செயலாளர்களும் முதலமைச்சரின் ‘ஆலோசகரது’ தயவை எதிர்பார்த்திருந்தனர் என்றும், அவர் (ஆலோசகர்) ஜெயலலிதாவின் ஆணைகளுக்காக காத்திருந்தார் எனவும் தெரிகிறது.
கொள்ளளவுக்கு மேல் ஏரி நிரம்பி வழிந்து, ஏரி உடைப்பு ஏற்பட்டுவிடும் ஆபத்து என்று அங்கிருந்த ஊழியர்கள் கதறிய பிறகுதான் அவர் மதகுகளைத் திறக்க ஆணையிட்டார் என்றும், அதன்படி அது 1.12.2015 அதிகாலையில் செய்யப்பட்டது என்றும் தெரிகிறது. அதுவும் மாநகர மக்களுக்கும், குறிப்பாக ஆற்றங்கரையில் உள்ளவர்களுக்கும் எச்சரிக்கை செய்யாமல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, ஏற்கனவே அடையாறு ஆற்றில் பெருமளவு நீர் பாய்ந்துவந்து கொண்டிருந்த நிலையில் 33,500 கன அடிக்கு மேல் நீர் கண்மூடித்தனமாகத் திறந்து விடப்பட்டது நகரில் பெரும் வெள்ளத்தை ஏற்படுத்தியது, எனவே இது ‘இயற்கைப் பேரிடரல்ல’ – மாறாக நூற்றுக்கணக்கான மக்களின் சாவில் முடிந்த, முதலமைச்சர் மற்றும் அவரது அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரிடராகும்.
மேலும் அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் ஏராளமான மணலும் வண்டலும் படிந்து கடலுக்குள் நீர் பாய்வது தடைப்பட்டுள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் அடையாறு ஆறோ, செம்பரப்பாக்கம் ஏரியோ தூர்வாரப்படவில்லை. அதன் காரணமாக இந்த மனிதர்களால் ‘உருவாக்கப்பட்ட பேரிடர்’ ஏற்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளிலுள்ள பல வீடுகளில் நீர் புகுந்து மொத்தம் 347 பேர் இறந்துள்ளதாகத் தெரிகிறது. உண்மையான சாவு எண்ணிக்கையை வெளியிட அரசு அஞ்சுகிறது. நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மத்திய அமைச்சர், தமிழகத்தில் மழை வெள்ளச் சாவுகளின் எண்ணிக்கை 269 என்று தெரிவித்தார். வெள்ள நீர் வடியாததால் இன்னமும் திறக்கப்படாமல் பூட்டியுள்ள வீடுகளில் மேலும் பலர் இறந்திருக்கக் கூடும். எனவே வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று குடியிருப்போர் நிலைமையை அறிய உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் இழப்பு மற்றும் அவர்களது உடைமைகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் சேதம் ஆகியவை குறித்து தி.மு.க. மிகவும் கவலைப்படுகிறது. அரசால் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு மிகவும் குறைவு ஆகும். அது போதுமானதல்ல. பாதிக்கப்பட்டவர்களை ஒவ்வொருவராக அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை விசாரித்து போதுமான இழப்பீடு வழங்கப்படவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளாட்சிகளின் அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு அளித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். பயிர் மற்றும் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இயல்புநிலை மீட்கப்படும் வரையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச மின்சாரமும், தண்ணீரும் வழங்கவேண்டும். போதுமான உணவு மற்றும் அன்றாடத் தேவைகள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும். நிவாரண உதவி அளிக்கப்படுவதை அனைத்துக் கட்சிக்குழு கண்காணிக்க வேண்டும்.
மிகப்பெரும் சோகத்துக்கு நேரடியாகவும் வெளிப்படையாகவும் பொறுப்பான முதலமைச்சர், அவரது சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கு இருப்பதுபோல ‘கட்டளைப் பொறுப்பு’ (Command responsibility) சட்டக் கொள்கையின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும்.
எனவே, செம்பரம்பாக்கம் ஏரி மதகுகளைத் தாமதமாகத் திறந்ததற்கான காரணங்களைப் பற்றி விசாரித்து, பொறுப்பையும் நிர்ணயித்து மக்களுக்கு இழப்பீட்டையும் முடிவு செய்ய; சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது பதவியிலுள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கும்படி தமிழக ஆளுநரை கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி ஆகியோரும் உடன் இருந்தனர்.
English Summary: DMK president Karunanidhi plea to Governor