பிரபல நடிகை ரோஜாவுக்கு ஓராண்டு தடை. ஆந்திராவில் பரபரப்பு
பிரபல தமிழ், தெலுங்கு நடிகையும், இயக்குனர் செல்வமணியின் மனைவியும் ஆந்திர மாநிலத்தின் நகரி தொகுதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவுமான ரோஜா, சட்டப்பேரவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஓராண்டு தடை விதித்து சபாநாயகர் உத்தரவு இட்டுள்ளார். இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏர்பட்டுள்ளது. முதல்வர் சந்திரபாபு குறித்து தரக்குறைவாக விமர்சித்ததால் இந்த நடவடிக்கை என கூறப்பட்டுள்ளது.
ஆந்திராவில் ஒரே ஒரு போன் செய்தாலே போதும் வட்டிக்கு பணம் வீடுவந்து சேரும். ‘கால்மணி’ என்று கூறப்பட்டும் இந்த முறையை கந்துவட்டி கொடுப்பவர்கள் செய்து வருகின்றனர். ஆனால், பணத்தை திருப்பி கொடுக்காதவர்களின் வீட்டு பெண்களை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்தில் நடிகை ரோஜா பேச முற்பட்டபோது சபாநாயகர் அவருக்கு அனுமதி கொடுக்கவில்லை. உடனே ரோஜா, இந்த கந்துவட்டி கூட்டத்தில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதால்தான் இதுகுறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம் சாட்டினார். அதுமட்டுமின்றி முதல்வரை பார்த்து இவர் ‘சி.எம். சந்திரபாபு நாயுடுவா? கால் மணி சந்திரபாபு நாயுடுவா?’ என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தெலுங்கு தேச எம்.எல்.ஏக்கள் ரோஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து சட்டப்பேரவை விவகாரங்கள் அமைச்சர் ஒய்.ராமகிருஷ்ணுடு உடன் ஆலோசனை நடத்திய சபாநாயகர் கே.சிவபிரசாத் ராவ், ‘அவையில் தரக்குறைவாக நடந்துகொண்ட ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித் எம்.எல்.ஏ ரோஜாவுக்கு ஓராண்டு தடை விதிக்கிறேன். தலைவர் ஜெகன்ரெட்டி உள்பட அக்கட்சியில் 50 எம்.எல்.ஏ.க்கள், பேரவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ள, இந்த தொடர் முடியும் வரை தடை விதிக்கிறேன்’ என்று கூறினார்