இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூதேயா நாட்டின் பெத்லகேம் எனும் சிற்றூரில் தச்சர் யோசேப்புக்கும், மரியாளுக்கும் மகனாகப் பிறந்தவர் இயேசு. யோசேப்புக்கு மனைவியாக நியமிக்கப்பட்ட மரியாளின் வயிற்றில் தூய ஆவியால் நிரப்பப்பட்டு கன்னியின் மகனாய் இயேசு பிறந்தார். எனவே இயேசு கடவுளின் குமாரனாய் இவ்வுலகில் வந்தார் என்பதே நம்பிக்கையின் செய்தி. இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்தது, தந்தையின் அன்பு என்பதும் – (யோவான் 3: 16) அதே வேளையில் இவ்வுலகம் பாவம் என்ற அநீதியான அமைப்பில் நிறைந்திருந்ததை முழுவதும் அகற்றி, மனுக்குலம் பாவத்திலிருந்து முழு விடுதலை அதாவது, அரசியல், சமூக, பொருளாதார, சமய, கலாசார நிலைகளில் தனி மனித விடுதலை பெற வேண்டும் என்பதே இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நோக்கமாக இருந்தது. தனி மனித விடுதலை என்பதே முழு விடுதலையை நோக்கியது என்பதை அறியும் வண்ணம் இறை தூதர், இயேசு என்ற பெயருக்கு பாவத்திலிருந்து விடுதலை அளிப்பவர்.
அதாவது இரட்சகர் என்று கூறினார். – (மத்தேயு 1: 21) ஆகவே இயேசு கிறிஸ்து உலக இரட்சகர் என்பதையும் இவ்வுலகை மீட்க வந்தவர் இயேசு என்பதையும் அறிய முடிகிறது. இயேசு கிறிஸ்து உலக இரட்சகர் என்ற நிலையில் அவர் அரண்மனையில் அலங்காரமாக ஆடம்பரமாக பிறக்காமல் மாட்டுத் தொழுவத்தில், ஏழ்மையின் கோலமாக தாழ்மையின் வடிவாகப் பிறந்தார். – (பிலிப்பியர் 2: 4-8) இயேசு பிறந்தார் என்ற செய்தி இவ்வுலகில் முதன்முதலாக ஆடுகளை வயல்வெளியில் மேய்த்துக்கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு இறைத் தூதரால் அறிவிக்கப்பட்டது. ‘அப்பொழுது குழந்தையை முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்’ என்பதே செய்தியாகியது. அதே வேளையில் வானத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றியதைக் கண்ட வான சாஸ்திரிகள், மேசியா அதாவது, இரட்சகர் பிறந்துள்ளார் என்பதை அறிந்து, ஏரோதுவின் அரச மாளிகைக்கு குழந்தையைக் காணச் சென்றனர்.
ஆனால், குழந்தை அங்கு இல்லை, இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்திருந்தார் என்பதை மேய்ப்பர்கள் மட்டுமே முதலாவது காண நேர்ந்தது. ஏழைகளுக்கு காட்சியளிப்பவராய், ஏழ்மையின் கோலமாய், தாழ்மையின் வடிவாய் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இயேசுவின் தாழ்மை இன்று நம் அனைவரையும் ஆதிக்க, ஆடம்பர, வாழ்விலிருந்து மாற்றம் பெற்று, அனைத்து ஏழை, எளிய மக்களோடு ஒன்றித்து வாழ அறைகூவல் விடுக்கிறது. இன்றைக்கும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களோடு தங்களைப் பகிர்ந்து அளித்து வாழும்போதும், அன்றாட வாழ்வில் தேவை உள்ளோருக்கு பகிர்ந்து கொடுக்கும்போதும், உண்மையான தாழ்மை நிலை உருவாக வேண்டும். அதே வேளையில் அது அனுதின வாழ்வாக அமைய வேண்டும்.
இயேசு பிறந்தார் என்ற செய்தி மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டபோது ‘‘உன்னதத்தில் கடவுளுக்கு மகிமை, பூமியிலே சமாதானம், மனிதர்மேல் பிரியம்’’ என்று கூறப்பட்டது. இந்தப் பிறப்பின் செய்தி நமக்கு இன்று கூறுவது என்னவென்றால் ஏழை-பணக்காரன், ஆண்டான்-அடிமை, ஆண்-பெண், வெள்ளை-கருப்பு சாதிய வேறுபாடுகள் என்றும், இனம், மொழி என்ற நிலையில் வன்முறைக் கலாசாரங்கள் நிலவி வரும் சூழலில், அனைத்து மக்களும் ஒற்றுைமயுடன் வாழவும், ஒன்றாக, நிறைவாக அனைத்தையும் பகிர்ந்து வாழவும் வேண்டும் என்பதே ஆகும். இன்றைக்கு சமூக, அரசியல், பொருளாதார, சமயத்தால் நிலவும் வன்முறைகள், ஏற்றத்தாழ்வுகள் இவற்றை களைந்தெறிந்து அனைவரும் உண்மையான மகிழ்ச்சியோடு, சமாதானத்தோடு வாழ தாழ்மையின் கோலத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவை உள்ளத்தில் ஏற்று வாழும்போது நிறைவான, முழுமையான வாழ்வு அனைவருக்கும் நிலவும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
எனவே ஏழை, எளிய மக்களின் வாழ்வில் அன்றாடம் மகிழ்ச்சியைக் காண ஆதிக்க, பணக்கார முதலாளித்துவ நிலையிலிருந்து நம் எண்ணங்களை மாற்றி எளிய உள்ளத்தோடு, தாழ்மையின் பணிவோடு நம் அனைத்து உடைமைகளை, உரிமைகளை பிறருக்கு பகிர்ந்து வாழும்போது தினமும் கிறிஸ்துமஸ் நாளாக அமையும். இப்படிப்பட்ட வாழ்வே இம்மண்ணில் நமக்கு முழுமையான மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் அனுதினமும் அருளச்செய்யும், அதன் மூலம் விண்ணுலகின் கடவுள் மகிமை பெறுகின்றவராக இருக்கிறார். அனைத்து மக்களும் நலமுடன் வாழ நம்மை எளிமையின் வாழ்வுக்குள் அர்ப்பணிப்போம். இயேசு கிறிஸ்துவின் அன்பும், அருளும், ஆசீர்வாதமும் நம் அனைவருடனும் என்றும் நிலைத்திருப்பதாக. கடவுள் அனைவரையும் இந்தக் கிறிஸ்துமஸ் காலங்களிலும், புதிய ஆண்டிலும் ஆசீர்வாதமாக வழிநடத்துவாராக.