மழை அடங்கிவிட்டது. கொசுக்களின் படையெடுப்பு தொடங்கிவிட்டது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரில் அவைகள் மின்னல் வேகத்தில் இனப்பெருக்கம் செய்துகொண்டிருக்கிறது. கொசுக்கள் சாகும் வரை தினமும் 3 முதல் 10 முட்டைகள் இடும். அதனால் ஆங்காங்கே லட்சக்கணக்கில் கொசுக்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். அதுபோல் சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி உயிர்வாழும் ஆற்றலும் அதற்கு உண்டு. கோடை காலத்தில் 7 நாட்களில் மடிந்துபோகும் அவை, மழைக்காலத்தில் 21 நாட்கள் வரை கும்மாளமடிக்கும்.
இயற்கை பல்வேறு சாதகமான அம்சங்களை கொசுவிற்கு வழங்கியிருக்கிறது. அதில் ஒன்று அதன் உணவு. அதற்கு வாரத்திற்கு ஒரு நாள் உணவு போதுமானது. அப்போது தனது உடல் எடையைவிட இருமடங்கு உணவை அது எடுத்துக்கொள்கிறது. உணவு எப்போதும் அதன் உடலில் ஸ்டாக் இருப்பதால்தான், பெரும்பாலும் காலை நேரங்களில் ஓய்வெடுக்கிறது. கொசுக்களில் 2500 முதல் 3000 வகைகள் இருந்தாலும் இந்தியாவில் அதிகம் காணப்படுவது ஐந்தாறு வகை கொசுக்கள்தான்.
கொசுவை பற்றிய இந்த கொசுறு செய்திகள் படிக்க சுவாரஸ்யமாக இருந்தாலும், மழைக் காலத்தில் மரணம் வரை மக்களை கொண்டுசெல்லக்கூடிய பல்வேறு கொடிய நோய்களுக்கு இந்த கொசுக்கள்தான் காரணம்.
காலரா:
தண்ணீர் மூலமும், உணவு மூலமும் பரவும் நோய் இது. காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை இதன் அறிகுறி. வாந்தியும்– வயிற்றுப்போக்கும் தினமும் 20–30 தடவைகூட ஏற்படும். இதனால் நோயாளி தளர்ந்துபோவார். சிறுநீர் அளவு குறையும். இதனால் கிட்னிகளை முடக்கும் அபாயம் உண்டு.
கர்ப்பிணிகள் இந்த நோயிடம் மிகுந்த கவனம் காட்டவேண்டும். கருகலைந்துபோய்விடக்கூடும். கருவில் இருக்கும் சிசு இறந்து போகும் நிலையும் உருவாகலாம். இந்த நோய்க்கு முதல் நிவாரணமாக இருப்பது ‘ஓ.ஆர்.எஸ்’ எனப்படும் ‘ஓரல் ரிஹைடிரேஜன் செல்யூஷன்’. இதில் சோடியம் குளோரைடு, ட்ரை சோடியம், சிட்ரேட் டீஹைட்ரேட், பொட்டாசியம் குளோரைடு, குளுகோஸ் போன்றவை கலந்திருக்கின்றன.
ஒரு பாக்கெட் ஓ.ஆர்.எஸ். பவுடரை கொதித்து ஆறிய ஒரு லிட்டர் நீரில் கலந்து பருகவேண்டும். ஒவ்வொரு முறை வயிற்றுப் போக்கு ஏற்பட்டதும் பருகிக்கொண்டிருக்கவேண்டும்.
உடனடியாக மருந்து கடைகளில் இதை வாங்க முடியாதவர்கள் அவசரத்திற்கு வீட்டிலும் தயாரிக்கலாம். சுத்தமான ஒரு லிட்டர் நீரில் 5 கிராம் உப்பு, 20 கிராம் சர்க்கரை கலந்து பருகவேண்டும். இவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். காலராவுக்கு தடுப்பு ஊசி உள்ளது.
டெங்கு:
ஈடிஸ் என்ற வகை கொசு இந்த நோயை உருவாக்குகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, தசை, கை, கால், முதுகில் வலி ஏற்படும். சருமத்தில் சிவப்பு நிறத்தில் திட்டாக நிறமாற்றம் தோன்றும். நோய்த் தன்மை கடுமையாகிவிட்டால் ரத்தத்தில் ப்ளேட்லெட் கவுண்ட் குறைந்து ஈறு, மூக்கில் இருந்து ரத்தம் வெளியேறும். மலம் கறுப்பு நிறமாகும். உணவு, நீர் பருக விருப்பம் இருக்காது.
சுத்தமும், சுகாதாரமும் இருந்தால் மட்டுமே இந்த நோயை தடுக்கமுடியும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். பாதுகாக்கப்பட்ட நீரை நிறைய பருகவேண்டும். பழச்சாறு நல்லது. இந்த நோய்க்கு முழுமையான சிகிச்சையும், முறையான ஓய்வும் மிக அவசியம்.
எலிக்காய்ச்சல்:
எலியின் சிறுநீர் மூலம் வெளியேறும் நோய் அணுக்கள் நீர்ப் பகுதிகளில் கலக்கிறது. அது மனிதர்களின் சருமத்தில் உள்ள காயங்கள் வழியாக உடலுக்குள் செல்கிறது. காய்ச்சல், உடல்வலி, கண்களில் சிவப்பு நிறம் தோன்றுதல் போன்றவை இதன் அறிகுறிகள்.
எலி மட்டுமின்றி நாய், பறவைகள், கால்நடைகள் மூலமும் இந்த நோய் பரவலாம். நோய் பாதித்த இவைகளுடைய சிறுநீர் கலந்த நீரை குடித்தாலோ, அந்த நீர் மனித உடலின் காயங்கள் வழியாக சென்றாலோ மனிதர்களை இந்த நோய் தாக்கும். கண், மூக்கு மற்றும் மெல்லிய துவாரங்கள் மூலமாகவும் இந்த நோய் அணுக்கள் மனித உடலுக்குள் செல்லும். அதனால் உடலில் காயங்கள் இருப்பவர்கள் அழுக்கு நீரில் இறங்கக் கூடாது. சுகாதாரமற்ற நீரில் குளிக்கவும் கூடாது.
சிக்குன்குனியா:
காய்ச்சல், மூட்டுகளில் வலி, நீர்க்கட்டு, சிவந்த தடிப்புகள் தோன்றுதல் போன்றவை இதன் அறிகுறி. நோய் தீர்ந்தாலும் மாத கணக்கில் வலி பாடாய்படுத்திக் கொண்டிருக்கும்.
எச்1 என்1: கடுமையான உடல் வலி, தொண்டை வலி, இருமல் போன்றவை இதன் அறிகுறிகள். காற்று மூலம் இது பரவும்போது காய்ச்சல், ஜலதோஷத்துடன் கடந்து போய்விடும். ஆனால் குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் இதன் தாக்குதலால் மிகுந்த இடர்பாடுகளை சந்திப்பார்கள்.
சேற்றுப்புண்: மழைக்காலத்தில் பெரும்பாலானவர்கள் இதனால் அவதிப்படுவார்கள். சிலவகை பூஞ்சை கிருமிகள் விரல் இடுக்குகளை தாக்குவதால் இந்த பாதிப்பு ஏற்படும். முதலில் சிறு சிறு கொப்புளங்கள் தோன்றும். பின்பு வலி, அரிப்பு உருவாகும். கால்களை நன்றாக கழுவி துடைத்து, ஈரப்பதம் இல்லாமல் செய்து, அதற்குரிய கிரீமை பூசவேண்டும்.
டைபாய்டு:
நோயாளிகளின் கழிவுகள் கலந்த நீரின் மூலமும்– உணவின் மூலமும் ஏற்படும் நோய் இது. விட்டுவிட்டு தோன்றும் காய்ச்சல், பசியின்மை, வயிற்றுவலி போன்றவை இதன் அறிகுறிகள்.
மழைக்கால நோய்கள் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும்?
நன்றாக கொதிக்கவைத்து ஆறிய நீரை மட்டும் பருகுங்கள். தண்ணீர் குறைந்தது ஐந்து நிமிடங்கள் நன்றாக கொதித்தால்தான் மஞ்சள் காமாலைக்கு காரணமான ‘ஹெப்படைட்டிஸ்– ஏ’ வைரஸ் போன்ற நுண்கிருமிகள் அழியும்.
உணவுகளை நன்றாக வேகவைத்து ஆவி பறக்க சாப்பிடுங்கள்.
உணவுகளை சுத்தமான பாத்திரங்களில் அடைத்துவைத்து பயன்படுத்துங்கள்.
பழங்கள், காய்கறிகளை நன்றாக கழுவவேண்டும். சுடுநீரில் ஒன்றுக்கு இருமுறை கழுவி பயன்படுத்துங்கள்.
பழைய உணவுகள், திறந்துவைத்த உணவுகள், ஐஸ் சேர்த்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.
சாப்பிடும் முன்பு கைகளை நன்றாக சோப்பிட்டு கழுவுங்கள்.
கழிப்பறைக்கு சென்ற பிறகு கை, கால்களை சோப்பிட்டு கழுவுங்கள்.
சாலை ஓர உணவுகளை தவிர்த்திடுங்கள். குறிப்பிட்ட காலம் வரை அசைவ உணவுகளையும் தவிர்க்கலாம்.
தும்மும்போது, இருமும்போது டவலால் மூக்கையும், வாயையும் மூடிக்கொள்ளுங்கள்.
கொசுக்கள் உற்பத்தியாக எந்த வாய்ப்பினையும் உருவாக்கி கொடுத்துவிடாதீர்கள். முட்டை, லார்வா, பியூப்பா போன்ற மூன்று கட்டங்களாக கொசு நீரில்தான் வளரும். வளர்ச்சியடைந்த கொசுவே மனிதர்களை தாக்க வெளியேவரும். அதனால் வீட்டை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். பிளிச்சிங் பவுடர் பயன்படுத்துங்கள்.
கொசுக்களை பற்றி பலரும் இரவில் மட்டுமே கவலைப்படுகிறார்கள். காலை நேரங்களில் தாக்கும் கொசுக்கள் அபாயகரமானவை என்பதை நினைவில் வைத்திருங்கள்.
மழைக்கால நோய்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த குழந்தைகள், சர்க்கரை நோயாளிகள், முதியோர்களை அதிகம் பாதிக்கும். அவர்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட்டால் உடனடியாக முறையான சிகிச்சைகளை மேற்கொள்ளுங்கள்.
மழைக்கால நோய்களில் இருந்து முழுமையாக தப்பிக்க குடும்ப மருத்துவரின் முழுமையான ஆலோசனைகளை பெறுங்கள்.