மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம். ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் இருக்க வேண்டும். குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை. ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும். பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது. வைகுண்டம் நல்லவர்களின் காலடி பட்டவுடன் திறந்து கொள்ளும். ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். அதற்காக, வைகுண்டத்துக்குள் எல்லாரும் புகுந்து விட முடியாது.
வைகுண்ட ஏகாதசி அன்று இறந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. பெருமாளின் பாதத்தில் போய் சேர்ந்து விட்டார், என்பதற்கு வேறு காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களே ஏகாதசியன்று மரணம் அடைவர் என்பதால் இவர் சொர்க்கத்திற்குள் செல்வது உறுதி என்பர். வைகுண்ட ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவுநாள் வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது. (கூடுமானவரை கோயில்களில் பிரசாதம் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்) இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும். இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மட்டுமே. இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும்.
பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உடலின் நடுவே ஆத்மா உள்ளது போல, கோயிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி, துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும். காலை 3 மணிக்கு பக்திப் பாடல்களை பாட வேண்டும். 3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்து விட வேண்டும். அகத்திக்கீரை பொரியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை. இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் முதல்நாளான தசமி அன்று ஒருபொழுது உணவு உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் உண்ணாமலும், உறங்காமலும்விரதம் இருக்கவேண்டும். மறுநாளான துவாதசியன்று சூரியோதயத்திற்குள் நீராடி துளசி தீர்த்தம் அருந்த வேண்டும். காலையிலேயே சாப்பாட்டை முடித்து விட்டு பகல் முழுவதும் உறங்காமல் நாராயண நாமத்தை ஜெபித்தபடி இருக்க வேண்டும். வைகுண்ட ஏகாதசி விரதமிருப்பவர்கள் பாவம் அனைத்தும் நீங்கப்பெற்று வைகுண்டம் சேர்வர். மாதத்துக்கு இரண்டு ஏகாதசிகளாக வருடத்துக்கு இருபத்து நான்கு ஏகாதசிகள் வருகின்றன. மார்கழி வளர்பிறையில் வருவது இருபத்தைந்தாவது ஏகாதசி. இதுவே வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக்கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது.
எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது. வைகுண்டத்தை திருநாடு என்று தமிழில்குறிப்பிடுவர். அத்திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் என்னும் எவ்வித உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பர். பரசவநிலையில் பெருமாளை புகழ்ந்து ஆடிப்பாடுவர். இக்காட்சியைப் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கத்திலும் நிகழ்த்த வேண்டும் என்ற ஆவல் நாதமுனிகளின் உள்ளத்தில் எழுந்தது. அரையர் என்னும் அபிநயத்தோடு ஆடும் கலைஞர்களை உருவாக்கினார். இதுவே அரையர் சேவை என்று வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.
அரையர் சேவைக்கென்று தனி உடை, பிற அலங்காரம் எதுவும் செய்து கொள்வதில்லை. கூம்பு வடிவ குல்லா ஒன்றை தலையில் அணிந்து கொண்டு பெருமாளுக்கு சூடிக்களைந்த மாலை, பரிவட்டம் ஆகியவற்றை மட்டும் அணிந்து கொண்டு அபிநயம் செய்வர். பாசுரங்களை பாடும்போது, அதற்கேற்ப முகம், கை பாவம் காட்டி அரையர் நடிப்பர். அரையர் சேவையில் முத்துக்குறி என்னும் பகுதி உண்டு. குறிசொல்லும் ஒரு பெண்ணிடம், தாய் தன் மகளின் எதிர்காலம் குறித்து கேட்பதே முத்துக்குறி. முத்துக்குறியைக் காண வரும் ஆண்களும், பெண்களும் பட்டு உடுத்தி வருவது மரபு. அன்று அரையர் ஒருவர் பட்டு உடுத்தி, தாயாக, மகளாக, குறிசொல்பவளாக மாறி மாறி அபிநயத்தோடு பாடி ஆடுவது சிறப்பு. தமிழகத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அரையர் சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் பத்து என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் பத்து நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொள்வர்.