இளம் குற்றவாளிகள் வயது வரம்பை நிர்ணயிக்கும் சட்டத்தில் மாற்றம். இன்று மாநிலங்களவையில் நிறைவேறுமா?

இளம் குற்றவாளிகள் வயது வரம்பை நிர்ணயிக்கும் சட்டத்தில் மாற்றம். இன்று மாநிலங்களவையில் நிறைவேறுமா?
Parliament
டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளம் குற்றவாளி நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் சிறார் குற்றவாளிகள் வயது வரம்பை நிர்ணயிக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரும் மசோதா மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த விவாதத்திற்கு காங்கிரஸ் கட்சி ஒத்துழைப்பு அளித்தால் மசோதா எவ்வித தடங்கலும் இன்றி நிறைவேறும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

இந்தியாவையே உலுக்கிய மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் சிறார் குற்றவாளி 3 ஆண்டுகள் டெல்லி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். தற்போது தண்டனை காலம் முடிந்து நேற்று முன்தினம் விடுதலையானான்.

இவ்வழக்கில் மற்ற குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுபோல் சிறார் குற்றவாளிக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என நிர்பயாவின் பெற்றோர் உள்பட சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர். விடுதலையை எதிர்த்து டெல்லி பெண்கள் ஆணையம் தொடர்ந்த மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் சிறார் குற்றவாளியின் விடுதலைக்கு தடைவிதிக்க மறுத்தது. இந்த தீர்ப்பு பலருக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இந்த நிலையில்  இளம் குற்றவாளிகள் வயது வரம்பை நிர்ணயிக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் மசோதாவை உடனடியாக மத்திய அரசு நிறைவேற்றி கொடிய குற்றம் புரிபவர்கள் யாராக இருந்தாலும் கடும் தண்டனை பெற வழிவகை செய்ய வேண்டும் என நிர்பயாவின் பெற்றோரும் பெண்கள் அமைப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சிறார் குற்றவாளிகள் வயதை நிர்ணயிக்கும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் மசோதா மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த சட்டத்தின்படி 16லிருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள் கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடும் போது அவர்களை பெரியவர்களாக கருதியே தண்டனை வழங்கப்படும்.

இந்த மசோதாவிற்கு முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஒத்துழைப்பு அளித்தால், இந்த சட்ட திருத்த மசோதா, இன்று நிறைவேறும் என்றும் மசோதாவை நிறைவேற்றுவதில் மத்திய அரசு மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் திரு.வெங்கையா நாயுடு கூறினார்

English Summary: Rajya Sabha to discuss Juvenile Justice Bill today. Union Minister M Venkaiah Naidu

Leave a Reply