நாளை முதல் ரயில் தட்கல் முன்பதிவு கட்டணம் உயர்வு.
தமிழகம் உள்பட பெரும்பாலான மாநிலங்களில் பேருந்து கட்டணங்கள் அதிகரித்து கொண்டே இருப்பதால் பெரும்பாலும் ரயில்களை பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ரயில் கட்டணமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் உயர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் தட்கல் முறையில் ரயில் பயணத்திற்கான முன்பதிவு செய்வதற்கான கட்டணம் நாளை முதல் உயர்த்தப்பட உள்ளதாக ரயில்வேத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு அதிகபட்ச கட்டணம், 175 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ.90-ல் ரூ.100 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச, குறைந்தபட்ச கட்டணங்கள், பயண தூரத்துக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகின்றன.
ஏ.சி. மூன்றாம் வகுப்பு பெட்டிகளுக்கு, அதிகபட்ச கட்டணம் ரூ.350-ல் இருந்து ரூ.400 ஆகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ.250-ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கான தட்கல் முன்பதிவை பொருத்தவரை, அதிகபட்ச கட்டணம் ரூ.500 ஆகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ.400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம், இரண்டாம் வகுப்பு அமரும் வசதி கொண்ட பெட்டிகளுக்கான தட்கல் முன்பதிவுக் கட்டணங்களில் எந்தவித மாற்றமும் இல்லை இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.