பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டுக்கு நிச்சயம். பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி

பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டுக்கு நிச்சயம். பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி
ponradhakrishnan
பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என மத்திய அரசை அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் வரும் பொங்கலுக்குள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்திட மத்திய அரசிடம் அனுமதி பெற்றுவிடுவோம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்திற்கு  பதில் கடிதம் எழுதியுள்ள பொன்.ராதாகிருஷ்ணன்,  ” ஜல்லிக்கட்டு குறித்து தாங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்து மகிழ்ச்சி அடைந்தேன். ஜல்லிக்கட்டை நடத்த தாங்கள் எடுத்த முயற்சிகள் குறித்தும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழர்களின் பண்பாட்டு வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டை மீண்டும் நடத்த வேண்டும் என்று கடந்த ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து நான் முயன்று வருகிறேன். இந்த விளையாட்டைத்  தமிழகத்தில் மீண்டும் நடத்த வேண்டுமென்று தமிழகத்தைச்  சேர்ந்த முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒரு குரலாகக்  கோரிக்கை வைத்திருப்பது என் பணிக்கு மிகவும் பக்கபலமாக அமைந்துள்ளது. அதற்காக அக்கட்சிகளின் தலைவர்களுக்கு எனது நன்றியைத்  தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து,  இத்துறையை சார்ந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரை ஏறக்குறைய தினசரி சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளேன்.

கடந்த 22ம் தேதி பிரகாஷ் ஜாவ்டேகர் தனது துறையைச் சார்ந்த அதிகாரிகளை அழைத்து, ஜல்லிக்கட்டை நடத்த எந்த வழிமுறைகளைக் கையாளலாம் என்று ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அங்கு பேசப்பட்ட விஷயங்களைத் தற்போது வெளியில் பேசுவது முறையல்ல என்ற காரணத்தினால் அந்த விவரங்களை வெளியிடவில்லை.

நேற்று ஜல்லிக்கட்டு குழு தலைவர் ராஜசேகரோடு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகரை சந்தித்து, ஜல்லிக்கட்டை ஜனவரி 2016–ல் தை பொங்கல் அன்று நடத்த அனுமதி வேண்டுமென்ற வலியுறுத்தினேன்.

கடந்த ஒரு மாத காலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் வருகின்ற ஜனவரி மாதம், தமிழர் திருநாளாம் தை பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த அனுமதி பெற்று விடுவோம் என்கின்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவை அனைத்திற்கும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் முழு ஆதரவு உள்ளது என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply