பிரதமரின் திடீர் பாகிஸ்தான் பயணம். சிறந்த ராஜதந்திரம் என சுஷ்மா பாராட்டு
ரஷ்யா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கிளம்பிய பாரத பிரதமர் நரேந்திரமோடி, இரண்டு நாடுகளிலும் திட்டமிட்டபடி பயணத்தை முடித்துவிட்டு, டெல்லி திரும்பும் நிலையில் திடீரென அவர் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தார். இது இந்திய அரசியல் தலைவர்களை மட்டுமின்றி உலகத்தலைவர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பிரதமரின் திடீர் பாகிஸ்தான் பயணம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘பிரதமர் மோடியின் இந்த துணிச்சலான நடவடிக்கை மூலம் அவர் ஒரு சிறந்த ராஜ தந்திரியாக திகழ்கிறார். அண்டை நாடுகளுடன் நல்லுறவை இப்படித்தான் வளர்க்க வேண்டும்’ என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.
பாகிஸ்தானில் உள்ள லாகூர் லாகூ விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமான நிலையத்திற்கு நேரில் வந்து கட்டித்தழுவி வரவேற்றார். இரு தலைவர்களும் சில நிமிடங்கள் நட்புடன் பேசியவாறே விமான நிலையத்தில் இருந்து நடந்து சென்றனர்.
இதனையடுத்து ராவல்பிண்டி ஜதி உம்ரா பகுதியில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இல்லத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டார். அங்கு இரு தலைவர்களும் சுமார் 90 நிமிடங்கள் இருநாட்டு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு எல்லைப் பிரச்சினை, இந்தியா, பாகிஸ்தான் உறவுமுறை ஆகியவை அலசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பை அடுத்து இருநாடுகளுக்கும் இடையே உள்ள பல பிரச்சனைகள் எதிர்காலத்தில் சுமூகமாக தீர்க்கப்படும் என நம்பப்படுகிறது.