தி.மு.க. தலைவர் யார் என்றே தெரியவில்லை. பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதர ராவ்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்து அனைத்து கட்சிகளும் ஆலோசனை செய்து வரும் நிலையில் பாஜகவும் தற்போது விறுவிறுப்பாக களமிறங்கியுள்ளது. நேற்று பா.ஜ.க. தேசிய பொது செயலாளர் முரளிதர ராவ் சென்னை வந்து தமிழக பாஜக தலைவர்களுடன் தேர்தல் கூட்டணி மற்றும் தேர்தலை எப்படி சந்திப்பது? என்பது குறித்து ஆலோசனை செய்தார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். இந்த பேட்டியில் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் முரளிதரராவ் கூறிய பதில்களும் பின்வருமாறு:
பா.ஜ.க. தேசிய பொது செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவ், சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:
பிரதமர் நரேந்திரமோடி, ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்து, நாடு முழுவதும் அந்தப்பணி நடந்தது. சமீபத்தில் பெய்த கனமழையால் சென்னையில் தேங்கிய குப்பைகள் அகற்றும் பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. எனவே, ‘தூய்மை இந்தியா’ திட்டம் போல், தமிழக பா.ஜ.க. இந்த குப்பைகளை அகற்ற எதுவும் திட்டம் வைத்துள்ளதா?.
சென்னையில் பெய்த தொடர் மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலைக்கு கொண்டு வருவதில் உள்ளூர் நிர்வாகம் (சென்னை மாநகராட்சி) தோல்வியடைந்துவிட்டது. தமிழக அரசு வெள்ளத்தை தடுப்பதற்கான முறையான நடவடிக்கைகளை சரியான நேரத்தில் செய்யவில்லை. நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பை அகற்றுவதிலும் தவறிவிட்டது.
ஆனாலும், இந்த அசாதாரண சூழ்நிலையில் அரசை குறைகூற நாங்கள் விரும்பவில்லை. மீட்பு நடவடிக்கைகளில் அரசுடன் இணைந்து செயல்பட்ட சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளுக்கு எனது பாராட்டை தெரிவித்துக்கொள்கிறேன். அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பா.ஜ.க.வும் உதவி செய்யும். வார்டு அளவில், மண்டல அளவில் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் தூய்மை பணியில் ஈடுபடுவார்கள்.
பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கும் பணி எந்த அளவில் நடந்து கொண்டிருக்கிறது?. இதுவரை தமிழகத்தில் எவ்வளவு உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்?
பா.ஜ.க.வில் உறுப்பினர் சேர்க்கும் பணி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதுவரை 50 லட்சம் பேர் ‘மிஸ்டு கால்’ மூலம் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்த உறுப்பினர்களின் விவரம் ‘பூத்’ அளவிலான நிர்வாகிகளுக்கு அனுப்பிவைக்கப்படும். தேர்தலில் இது எங்கள் அணிக்கு கூடுதல் பலத்தை ஏற்படுத்தும். லாபகரமானதாக இருக்கும்.
தமிழக பா.ஜ.க.வில் மாநில நிர்வாகிகள் பட்டியல் மாற்றியமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறதே? புதிய நிர்வாகிகள் பட்டியல் எப்போது வெளியாகும்?
முதலில் மண்டல அளவில், மாவட்ட அளவில் நிர்வாகிகள் தேர்தல் நடந்து வருகிறது. மாநில நிர்வாகிகளும் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதற்கு முன்னதாக, சட்டமன்ற தேர்தலை முழு வீச்சில் எதிர்கொள்ளவே நாங்கள் தயாராகிவருகிறோம்.
தமிழகத்தில் இன்னும் 4 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை பா.ஜ.க. எந்த வகையில் எதிர்கொள்ள போகிறது?
சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் தமிழக பா.ஜ.க. தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. இதற்காக, 36 பிரிவு அமைக்கப்பட்டுள்ளன. அதன் தலைவர்களாக தேசிய அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர்கள் ஈடுபடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை இன்னும் வலுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களின் ஆதரவும் பெறப்படும். பொது செயல் திட்டங்களின் அடிப்படையிலேயே தேர்தல் அறிக்கை இருக்கும். வெற்றிக்கான வழிவகைகளுடன் முழுவீச்சில் தேர்தல் களத்தை சந்திப்போம்.
உங்கள் கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வை இழுக்க வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணி ஒருபுறம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. மறுபுறம், தி.மு.க. அணிக்கு தே.மு.தி.க. வர வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதியே அழைப்பு விடுத்துள்ளாரே?.
தி.மு.க. தலைவர் யார் என்றே தெரியவில்லை. கருணாநிதியா?, மு.க.ஸ்டாலினா?. அதிக பிரச்னைகளை கொண்டுள்ளது தி.மு.க. கூட்டணி. அந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன? காங்கிரஸ் கட்சி, தி.மு.க.வை நம்பவில்லை. தி.மு.க., காங்கிரஸ் கட்சியை நம்பவில்லை. அதிக ஊழல் செய்ததும் தி.மு.க.தான். எனவே, ஊழலுக்கு எதிராக அவர்களால் போராட முடியாது.
தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கின்றன. அடுத்த மாதம் தொடக்கத்தில், எங்கள் கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து வெளிப்படையாக பேசுவோம். அப்போது, சட்டமன்ற தேர்தலில் யார் தலைமை தாங்குவது என்பதும், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதும் முடிவு செய்யப்படும். நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. இறுதி முடிவை பிரதமர் நரேந்திரமோடியும், எங்கள் கட்சியின் தேசிய தலைவர்களும் அறிவிப்பார்கள்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்கும் என்று கூறப்படுகிறதே?
இவ்வாறு சொல்வது கற்பனையானது.
அப்படி என்றால், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு வாய்ப்பே இல்லையா?
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று பா.ஜ.க.வும், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வும் ஒருபோதும் கூறியதில்லை. மற்றவர்கள்தான் அவ்வாறு ஆசைப்படுகிறார்கள். தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவானதாக இருக்கும்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகிறார்கள். தமிழக பா.ஜ.க.வின் நிலை என்ன?
ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும்தான் காரணம். இந்த விஷயத்தில், தமிழக பா.ஜ.க. ஜல்லிக்கட்டுக்கு முழு ஆதரவை தெரிவிக்கிறது. மத்திய அரசிடம் இந்த பிரச்னையை எடுத்து சென்று, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
முல்லைப் பெரியாறு, காவிரிப் பிரச்னையில் தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன?
தமிழர்களுக்கு நலன் பயக்கும் விஷயங்களுக்கு ஆதரவு அளிப்பதே தமிழக பா.ஜ.க.வின் குறிக்கோள். தமிழர் நலனுக்காக முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினால், அதில் பா.ஜ.க.வும் பங்கேற்று அரசின் முடிவுக்கு ஆதரவளிக்கும்.
இவ்வாறு கூறினார்.
Chennai today news: who is the president of DMK? asked Muralithararao