அயோத்தி ராமர் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த அமைச்சர் அதிரடி நீக்கம்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட முஸ்லீம்கள் உதவவேண்டும் என்று பேசிய அமைச்சர் ஒருவரை உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக நீக்கியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் இணை அமைச்சருக்கு இணையான பதவியில் இருக்கும் கேளிக்கை வரித்துறை ஆலோசகர் ஓம்பால் நெஹ்ரா என்பவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, “அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடியாவிட்டால் வேறு எங்கு கட்ட முடியும்? மதுராவில் நாம் கிருஷ்ணரை வழிபடுகிறோம். அங்கு மசூதி கட்டுவது எப்படி சரியாகும்? அயோத்தி, மதுராவில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு முஸ்லிம்கள் உதவவேண்டும். இதனால் விஎச்பி போன்ற அமைப்புகள் தங்கள் அடையாளத்தை இழக்கும்” என்று பேசினார். இவ்வாறு பேசிய ஒருசில நிமிடங்களில் அவருடைய அரசுப் பதவியை உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ் பறித்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பதவி இழந்த நெஹ்ரா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அயோத்தி, மதுராவில் ராமர் கோயில் கட்ட முஸ்லிம் சகோதரர்கள் உதவ வேண்டும் என்று கூறியது உண்மைதான். அதேவேளையில் இரு இடங்களிலும் 1-2 கி.மீ. தொலைவில் மசூதி கட்டுவதற்கு இந்து சகோதரர்கள் உதவ வேண்டும் என்றும் கூறினேன். அயோத்தி மற்றும் மதுராவில் ராமர் கோயில் கட்டவேண்டும் என்பதே எனது நம்பிக்கை” என்றார்.
இதனிடையே மாநில பாஜக தலைவர் லட்சுமிகாந்த் வாஜ்பாய் நேற்று கூறும்போது, “நாட்டின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளையே நெஹ்ரா பிரதிபலிக்கிறார். என்றாலும் அவரது கருத்துக்கு இது உகந்த நேரம் அல்ல. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது கோயில் கட்டும்பணியை எப்படி தொடங்க முடியும்? நெஹ்ராவின் கருத்து அர்த்தமற்றதாக உள்ளது” என்றார்.
Chennai Today News: UP CM Akhilesh Yadav sacks minister Ompal Nehra after he asks Muslims to help build temple