தமிழகத்தின் அதிகரிக்கும் கடன்… என்னதான் தீர்வு?

tnநம் நாட்டில் அதிகளவில் கடன் வாங்கியுள்ள மாநிலம் குறித்து ரிசர்வ் வங்கியின் ஆவணங்களின் அடிப்படையில் இந்தியா ஸ்பெண்ட் (IndiaSpend) என்ற பொருளாதார இணையதளம் ஆய்வு நடத்தி சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவிலேயே கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக அதிகமாக கடன் வாங்கியுள்ள மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும், தமிழகத்தில் வாழும் ஒவ்வொருவர் மீதும் உள்ள கடன் அளவு 28,778 ரூபாயாக இருப்பதாகவும் இந்தியா ஸ்பெண்ட் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கடன்!

கடந்த 2010 முதல் 2015-ம் நிதி ஆண்டு (பட்ஜெட் எஸ்டிமேட்) வரையிலான காலத்தில் மிக அதிகளவில் கடன் இருக்கும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தின் மொத்தக் கடன் தொகை ரூ.3,38,730 கோடி. அதற்கு அடுத்தப்படியாக ரூ.2,93,620 கோடி கடனுடன் உத்தரப்பிரதேசமும், ரூ.2,80,440 கோடி கடனுடன் மேற்கு வங்கமும், ரூ.2,20,450 கோடி கடனுடன் ஆந்திராவும், ரூ.2,10,040 கோடி கடனுடன் குஜராத் என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

ரூ.1,95,290 கோடி கடனுடன் தமிழகம் ஆறாவது இடத்தில் உள்ளது. தொடர்ந்து ரூ.1,56,760 கோடி கடனுடன் கர்நாடகா ஏழாவது இடத்திலும், ரூ.1,43,990 கோடி கடனுடன் ராஜஸ்தான் எட்டாவது இடத்திலும், ரூ.1,37,990 கோடி கடனுடன் கேரளா ஒன்பதாம் இடத்திலும், ரூ.1,13,070 கோடி கடனுடன் பஞ்சாப் பத்தாவது இடத்திலும் உள்ளது.

முந்தும் தமிழகம்!

அதிகமாக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் ஆறாவது இடத்தில் இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் மற்ற மாநிலங்களைவிட மிக வேகமாக மற்றும் மிக அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிக கடன் வாங்கிய மகாராஷ்டிரா மாநிலம் தனது வட்டியைக் குறைத்து வருகிறது. ஆனால், தமிழகம் கடனை வாங்கிக் குவித்து, அதிகளவில் வட்டியைக் கட்டி வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தின் கடன் அளவு 92 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் இந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆளுக்கு ரூ.28,778

அதே போல, மக்கள் தொகை அடிப்படையில் மாநிலத்தில் ஒவ்வொருவர் மீதும் உள்ள கடன் அடிப்படையிலும் தமிழகத்தின் தனிநபர் கடன் அதிகளவிலேயே உள்ளது. அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தின் மக்கள் தொகை 11.42 கோடி. தமிழகத்தில் 6.78 கோடி. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் உள்ள கடன் அளவு 28,778 ரூபாயாக உள்ளது. இதுவே மகாராஷ்டிராவில் 29,661 ரூபாயாக உள்ளது.

கடன் வாங்குவது தவறா?

தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்ததற்கு எதிர் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அரசு என்றால் கடன் வாங்க தான் நேரிடும்; அதுவும் இந்தியா போன்ற பெரிய நாடுகளில், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால், கடன் வாங்கித்தான் நலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதே நிதர்சனம். இன்றைய நிலையில் உலக அளவில் அமெரிக்காகூட பெரிய அளவில் கடன் வாங்கி முதலிடத்திலும், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. கடன் விஷயத்தில், நம் இந்தியா உலக அளவில் 22-வது இடத்தில் உள்ளது.

வருவாய் எப்படி வருகிறது?

ஆக கடன் வாங்காமல் எந்த ஒரு அரசாலும் இயங்க முடியாது என்ற வாதம் நியாயமானதுதான். தமிழகத்தின் கடன் சுமையைப் பற்றி தெரிந்து கொள்ளும்முன் தமிழக அரசுக்கு வருமானம் எப்படி வருகிறது, எப்படி செலவாகிறது என்பதை பார்ப்போம். மாநில அரசின் மொத்த வருவாய் இரு பிரிவுகளின் கீழ் வருகிறது. ஒன்று, மாநிலத்தின் சொந்த வருவாய். இதில் மாநில வரிகள் மற்றும் வரிகள் தவிர்த்த மற்ற வருவாய். மற்றொன்று, மத்திய அரசிடமிருந்து பெறப்படுபவை. இதில் மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு செல்லும் வரிகளில் தமிழகத்தின் பங்கு மற்றும் மத்திய அரசு தரும் மானியங்கள் ஒருவகை. கூடுதலாக, கடன்கள் மூலம் பெறப்படும் நிதி இன்னொரு வகை.

செலவுகளைப் பொறுத்தவரை, வட்டி இல்லாத செலவுகள், கடனை திருப்பித் தருதல், கடன் களுக்கான வட்டி செலுத்துதல் என வகை உண்டு. இதில் வட்டி இல்லாத செலவுகளில் சம்பளங்கள், ஓய்வூதியங்கள், ஊதியம் அல்லாத செயல்பாடு மற்றும் பராமரிப்புகள், உதவித் தொகைகள், ஏனைய வருவாய் செலவீனங்கள், மூலதன ஒதுக்கீடு, நிகரக் கடன் வழங்கல் போன்ற செலவுகள் உள்ளன.

தமிழக அரசின் வருவாய்!

கடந்த 2002-2003-ல் ரூ.20,836.74 கோடியாக இருந்த தமிழக அரசின் வருவாய் 2015-16-ல் ரூ.1,42,681.33 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஒவ்வொரு நிதி ஆண்டும் அதிகரித்துதான் வருகிறது.

வரவு எட்டணா, செலவு பத்தணா!

தமிழக அரசின் வருவாய் அதிகரித்துவரும் அதே சமயத்தில் அரசின் செலவும் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. கடந்த 2002-03-ல் ரூ.25,687.69 கோடியாக இருந்த வட்டி இல்லாத செலவு 2015-16-ல் பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.1,56,653.88 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் வருவாயைவிட செலவு அதிகரித்துக்கொண்டே வருவதால் நிதிப் பற்றாக்குறை ஏற்படுகிறது. தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறையைப் பொறுத்தவரை, 2015-16-ல் ரூ.31,829.19 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2014-15-ல் ரூ.27,345.74 கோடியாக இருந்தது. 2016-17-ல் ரூ.30,259.25 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2017-18-ல் ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் அந்த ஆண்டு முதல் நிதிப் பற்றாக்குறை மேலும் அதிகளவில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அதிமுக, திமுக கடன்!

நிதிப் பற்றாக்குறை சமாளிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. 31.3.2006 அன்று ஜெயலலிதா ஆட்சி செய்து ஐந்தாண்டு காலத்துக்குப்பின், தமிழக அரசின் கடன் ரூ.57,457 கோடியாக உயர்ந்தது. அதன் பின்னர் 2006-ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்தது. 2011-ல் திமுக ஆட்சி முடிவடையும்போது அரசின் கடன் ரூ.1,01,439 கோடியாக அதிகரித்தது.

இன்றைய ஆட்சியில் கடன்!

2011-ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா. அவர் ஆட்சி செய்த இந்த ஐந்து ஆண்டு காலத்தில் கடன் அளவு மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. கடந்த 2011-ல் தமிழகத்தின் கடன் ரூ.1,14,470 கோடியாக இருந்தது. இது 2012-ல் இது ரூ.1,30,630 கோடியாகவும், 2013-ல் ரூ.1,52,810 கோடியாகவும், 2014-ல் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி ரூ.1,71,490 கோடியாகவும் அதிகரித்தது. 2015-ல் பட்ஜெட் மதிப்பீட்டின்படி, இது ரூ.1,95,290 கோடியாகவும் அதிகரித்துள்ளது. 2015-16-ல் தமிழகத்தின் கடனானது ரூ.2,11,483 கோடி என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எகிறும் வட்டி!

கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழகம் மற்றும் ஹரியானாவைத் தவிர, மற்ற அனைத்து மாநிலங்களும் தாங்கள் செலுத்த வேண்டிய வட்டி தொகையை கணிசமாக குறைத்துக்கொண்டே வந்துள்ளன. தமிழக அரசு கடனுக்கு வட்டி செலுத்துவது 2011-12-ம் நிதி ஆண்டு திட்ட மதிப்பீட்டில் ரூ.9,233.40 கோடியாக இருந்தது. இது 2012-13-ல் ரூ.10,835.84 கோடியும், 2013-14-ல் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.13,129.77 கோடியும், 2014-15-ல் ரூ.15,890.18 கோடி என்று பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே 2015-16-ல் ரூ.17,856.65 கோடியாகவும், 2016-17-ல் ரூ.19,999.45 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக அரசு அதன் வருவாயில் (2015-16) 12.52% வட்டிக்காகவே செலவிடுவதால், வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்த முடியாத நிலையே உள்ளது. சாமானிய மக்கள் கடனைத் திருப்பி அடைப்பதற்கு வருவாயைத் தேடுகிறார்கள். ஆனால், தமிழக அரசு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு வழிவகைகளை தேடுகிறதா?

ஜெயித்தாரா ஜெயலலிதா?

“ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்ற தலைக்குனிவில் இருந்து மீட்டு, ஒவ்வொரு தமிழரும் தலைநிமிர்ந்து நிற்கவும் தன்மானத்துடன் வாழவும் நடவடிக்கை எடுப்போம்” என்று 2011-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கினார் ஜெயலலிதா. அதுமட்டும் இல்லாமல் “சிறப்புத் திட்டங்கள் மூலம் ஐந்தாண்டுகளில் ரூ.1,20,000 கோடி அளவுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டுவோம்” என்று வாக்குறுதி அளித்தார். ஆனால், நம் மாநில அரசின் கடன் தொகை எக்கச்சக்கமாக உயர்ந்ததுதான் மிச்சம்.

அம்மா புராணம்!

தமிழக அரசின் நிதி அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், பட்ஜெட் தாக்கல் செய்யும்போது முதல்வர் ஜெயலலிதா படம் போட்ட பெட்டியைக் கொண்டுவந்து பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்ததும், பின் பட்ஜெட் உரையை வாசிக்கும்போது ‘மாண்புமிகு அம்மா’ என 150 முறைக்கு மேல் சொன்னதும்தான் அவர் செய்த ஒரே சாதனை. மற்றபடி, பட்ஜெட் போட்டது எல்லாம் யாரோ என்கிற கதைதான்.

படங்களின் பெயரால்..!

இந்தியாவின் 2-வது பெரிய திரைப்படத் தொழில் மையமாக தமிழகம் திகழ்கிறது. சினிமா உட்பட கேளிக்கை வரியின் மூலம் தமிழகத்துக்கு 2014-15 பட்ஜெட் மதிப்பீட்டில் 65.64 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. இதேகாலத்தில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு 578.31 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிச் சலுகை அளிக்கப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதை ஒழுங்காக வசூலித்து நலத் திட்டங்களுக்கு செலவழிக்கலாமே?

இதுபோல் தமிழக அரசு விற்பனை வரியை ஒழுங்காக வசூலிப்பது இல்லை என்றும், பெரிய சில்லறை வணிக நிறுவனங்கள், நகைக்கடைகள் வரியை கட்டாமல் ஏமாற்றி வருவதாகவும், அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு இது போன்ற நிறுவனங்களை கண்டுகொள்வதில்லை என்றும் கூறுகின்றனர். இதனால் தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் கிடைக்காமல் போவதாக சொல்கின்றனர். இதுபோல், பல துறைகளில் பல நூறு கோடி வருமான இழப்பு ஏற்படுகிறது. அரசாங்கம் முறையாக இந்த வரிகளை வசூலித்திருந்தால், தமிழகத்தின் வருவாய் அதிகரித்திருக்கும். அதிக கடன் வாங்கும் நிலைமை வந்திருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.

இனிமே இப்படித்தான்!

தமிழக அரசின் 2015-16-க்கான பட்ஜெட் (ரூ.1,47,287 கோடி) எப்படி செலவிடப்படவுள்ளது என்பதை பார்ப்போம். இதில் 41% சம்பளம் மற்றும் ஓய்வூதியத்துக்காக ரூ.59,882 கோடி செலவிடப்பட உள்ளது. 40% மானியங்கள் மற்றும் சலுகைகளுக்காக ரூ.59,185 கோடியும், 12% வட்டி ரூ.17,856 கோடி மற்றும் 7% இலவசங்களை விநியோகிக்க மற்றும் பராமரிக்க ரூ.10,364 கோடி செலவிடப்பட உள்ளது.

ஆக, தமிழக அரசின் மொத்த வருவாயில் பெரும்பாலும் சம்பளம், ஓய்வூதியம், கடனுக்கான வட்டி, சலுகை, மானியம் மற்றும் இலவசத்துக்கே செலவிடப்படுகிறது. இதில் பெரும்பாலும் தனிநபருக்கே செலவிடப்பட வேண்டியதுள்ளதாக கூறுகின்றனர். இவ்வாறு செலவிட்டால், எவ்வாறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு முதலீடுகளை மேற்கொள்வது, எப்படி வருமானத்தைப் பெருக்குவது, தமிழகத்தின் கடன் 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் குறை கூறி வருகின்றனர். ஆனால், மற்ற கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் இந்தக் கடன் பிரச்னையை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதற்கான எந்தத் தீர்வும் அவர்களிடம் இல்லை என்பதே நிஜம்.

போதும் இலவச அரசியல்!

2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ ரேஷன் அரிசி, இலவச டிவி என இலவசங்களை அள்ளித் தெளித்து வெற்றி பெற்றது தி.மு.க. கூட்டணி. 2011-ல் ஆட்சியைப் பிடித்தே ஆகவேண்டும் என்று நினைத்த ஜெயலலிதா மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், மாணவர்களுக்கு லேப்டாப் என இலவசங்களை அறிவித்து ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா. மிக்ஸி, கிரைண்டர் போன்ற இலவசங்களால் ஏழை, நடுத்தர பெண்கள் ஏராளமானோர் பயன் அடைந்துள்ளனர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், 2016-ல் நடக்கப்போகிற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் போட்டி போட்டு ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் என்று அறிவித்தால், தமிழகத்தின் கடன் கழுத்தை நெறிக்கிற அளவுக்கு சென்றுவிடும். இதை ஆட்சியாளர்களும் வாக்காளர்களும் உணர்வார்களா என்பது மிகப் பெரிய கேள்வி.

ஜெயாவா, கருணாவா – யார் காரணம்?

தமிழகத்தின் கடன் சுமைக்கு காரணம் ஜெயலலிதாவா, கருணாநிதியா என்கிற கேள்வியை தவிர்த்து விடலாம். இருவருமே காரணம் என்பதே நிஜம். ஆனால், தனிப்பட்ட மனிதர்களின் தலையில் பழியை சுமத்துவதினால், எதிர்காலம் எந்த விதத்திலும் மாறிவிடப் போவதில்லை. இனியாவது நிதி நிர்வாகத்தை திறம்பட நடத்துகிற ஆட்சி வேண்டும். அப்படிப் பட்ட ஆட்சியைக் கொண்டு வருகிற தெளிவு மக்களிடம் இருக்க வேண்டும்.

இனியாவது தங்களுக்கு என்னென்ன இலவசம் கிடைக்கும் என எதிர்பார்க்காமல், நாட்டின் நிதி நலன் எப்படி இருக்கும் என்பதை வாக்காளர்கள் கவனிக்க வேண்டும்.

மக்கள் விழிப்புடன் இருந்தால், ஆட்சியாளர்கள் இலவசங்களை தந்து நிச்சயம் ஏமாற்ற முடியாது. மக்கள் விழிப்பு உணர்வு அடைவார்களா?

Leave a Reply