இது உங்கள் வீடு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். மோடியிடம் பாகிஸ்தான் பிரதமர் பாசமழை
சமீபத்தில் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே ஆச்சரியப்பட்ட ஒரு நிகழ்ச்சி, பாரத பிரதமர் திடீர் பயணமாக பாகிஸ்தான் சென்றது. இந்த சந்திப்பின் போது இருநாட்டு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது மட்டுமின்றி பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் நடந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.
ரஷ்ய, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துவிட்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பேத்தி மெஹருன்னிசாவின் திருமண விழாவில் கலந்து கொள்ள திடீரென பாகிஸ்தான் செல்ல முடிவெடுத்த பிரதமர் மோடி, லாகூரில் தரையிறங்கியபோது அவரை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் உற்சாகமாக வரவேற்று, தனது பாரம்பரிய வீட்டிற்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து சென்றார். உலக வரலாற்றில் இந்தியா பாகிஸ்தான் பிரதமர்கள் ஒன்றாக பயணம் செய்தது இதுவே முதல் முறை என அனைத்து ஊடகங்களும் இந்த சம்பவத்தை குறிப்பிடுகின்றன.
மேலும் தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் மோடிக்கு நவாஸ் ஷெரிப் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது, “உங்கள் குடும்பத்தினர் அனைவரும் இங்குதான் வசிக்கிறார்களா?” என்று ஆச்சரியத்துடன் மோடி கேட்க, “ஆமாம், 70-80 குடும்ப உறுப்பினர்கள் இந்த பெரிய வீட்டில்தான் வசிக்கின்றனர்.” என்று நவாஸ் பதிலளித்தார்.
பின்னர் நவாசின் அரண்மனை போன்ற வீட்டை சுற்றிப்பார்த்த மோடி, இங்கு நான் இனி அடிக்கடி வருவேன் என்று கூற, “தாராளமாக, இது உங்கள் வீடு, நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம்” என அகமகிழ்ச்சியுடன் நவாஸ் கூறினார்.
80 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பின் போது, நவாசின் தாயாரது காலை தொட்டு ஆசி பெற்ற மோடி, நவாஸ் ஷெரிப்பிடம் புடவைகள் உட்பட பல்வேறு பரிசுப்பொருட்களையும் வழங்கியுள்ளார்
Chennai Today News: This is your house said Pakistan PM to PM Modi