பத்திரிகையாளர்கள் கொலை: ஆசிய அளவில் முதலிடத்தை பெற்ற இந்தியா
நாளையுடன் முடியப்போகும் 2015ஆம் ஆண்டு பொதுமக்களுக்கும், விஐபிக்களுக்கும் பாதுகாப்பான வருடமா? என்ற கேள்வி ஏற்கனவே எழுந்துள்ள நிலையில் பத்திரிகையாளர்களுக்காவது பாதுகாப்பான வருடமா? என்பது குறித்த ஆய்வு ஒன்று சமீபத்தில் எடுக்கப்பட்டது.
இந்த ஆய்வில் பத்திரிகையாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரிய வந்துள்ளது. இந்த ஆண்டு உலகம் முழுக்க கொல்லப்பட்ட செய்தியாளர்களின் எண்ணிக்கை 110 என்றும் அதில் 9 பேர் இந்தியர்கள் என்றும் ஆய்வு கூறுகிறது.
‘ரிபோர்ட்டர்ஸ் விதவுட் பார்டர்ஸ்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியாவில் கிரைம் செய்தியாளர்களும், அரசியல்வாதிகளை பற்றிய புலனாய்வு செய்திகள் தரும் செய்தியாளர்களும் கனிம வளக் கொள்ளை பற்றிய செய்தி வெளியிட்ட செய்தியாளர்களும் என மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 5 பேர் அவர்கள் தங்கிய இடங்களிலும் மற்ற 4 பேர் விபத்து ஏற்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிய வருகிறது.
இந்த வருட ஆய்வின்படி ஆசியாவில் அதிக செய்தியாளர்கள் கொல்லப்பட்டது இந்தியாவில்தான். எனவே ஆசியாவில் இந்தியா முதலிடம் பிடிக்கிறது. அடுத்த இடத்தை பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் பிடிக்கின்றன.
சர்வதேச நாடுகளை பொறுத்தவரை, 67 செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கும் இடத்திலேயே பலியாகியுள்ளனர். இன்னும் 43 பேர் எப்படி இறந்து போனார்கள் என்றே தெரிய வரவில்லை. சர்வதேச நாடுகளை பொறுத்த வரை சிரியாதான் செய்தியாளர்களுக்கு அச்சுறுத்தல் தரும் நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தை பிரான்ஸ் பிடிக்க பிரேசிலுக்கு 3வது இடம்.
Chennai Today News: 9 Journalists murdered in India at 2015