சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம். காவல்துறையினர் அறிவுரை

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம். காவல்துறையினர் அறிவுரை
new year one
சென்னையில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு சென்னை கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் அதிகளவு பாதிப்படைந்துள்ளதால் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் சென்னை மெரீனா உள்பட பல முக்கிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டம் இருக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் டிசம்பர் 31- நள்ளிரவுக் கொண்டாட்டத்தின்போது செய்யக்கூடாத செயல்கள் குறித்து சென்னை காவல்துறை தனது அறிவுரைகளை கூறியுள்ளது. அதன்படி

#புத்தாண்டில்  மது அருந்திவிட்டு பொது இடங்களில் கொண்டாட்டம் என்ற பேரில் ஆடிக் கொண்டிருக்கக் கூடாது. மீறினால் நடவடிக்கைதான்… எல்லாமே அளவோடு இருந்து விட்டால், ஆண்டின் முதல் நாள்தானே என்ற மனித நேயத்தோடு கண்டும் காணாமலும் இருந்து விடுவோம்.

#நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறுகிற அத்தனை அசம்பாவித சம்பவங்களுக்கும் ஹோட்டலின் மேலாளர், உரிமையாளரே பொறுப்பு. ஹோட்டல்களில் போடப்படுகிற மேடைகளுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அனுமதியை ஹோட்டல் நிர்வாகம் பெற வேண்டும் என்பதை உறுதிப்படுத்தச் சொல்லியிருக்கிறோம்.

# அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நட்சத்திர ஹோட்டலை திறந்து வைத்து கேளிக்கைகளை தொடர கண்டிப்பாக அனுமதி கிடையாது.  அதேபோன்று மது ஆதிக்கத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களை நீச்சல் குளத்தில் இறங்க ஹோட்டல் நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

# ஈ.சி.ஆர். பகுதிகளில் இருக்கிற ஒருசிலர் தங்களுக்கு சொந்தமான பண்ணை வீடுகளை “பெஸ்டிவல்-ரென்ட்” என்ற பெயரில் நாளொன்றுக்கு ரூ. 50 ஆயிரம் முதல் பல லட்ச ரூபாய் என்றளவில் வாடகைக்கு விடுவதாக கடந்த ஆண்டே புகார்கள் எழுந்தது. ரகசிய சோதனையில் அந்த வீடுகளை வாடகைக்கு எடுத்து வைத்து சமூக விரோதச் செயல்களில், குறிப்பாய் போதை ஊசி, வரம்பு மீறிய  உல்லாசங்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுத்தோம். பண்ணை வீட்டின் அதிபர்கள் மீதும் நடவடிக்கை எடுத்தோம்.

#குடித்து விட்டு கார், பைக் போன்ற வாகனங்களை  ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து, வாகனம் பறிமுதல்  என்பதோடு அவர்களுடன் காரிலோ, பைக்கிலோ சேர்ந்து பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யலாமா என்றும் திட்டம் ஆலோசனையில்  உள்ளது.

இவ்வாறு சென்னை காவல்துறையினர் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

Leave a Reply