ராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட கூடும்.’ நிதிச்சந்தையில் நீண்ட காலமாக வலம் வரும் தகவல் அல்லது வதந்தி இதுதான். கடந்த சில மாதங்களாகவே இப்படி ஒரு தகவல் சந்தையில் இருந்தாலும் ரகுராம்ராஜன் இதனை மறுத்திருக்கிறார். அந்த பதவிக்கு நான் விண்ணப்பிக்கவில்லை.
அதற்காக நான் வேலை செய்யவில்லை. கிறிஸ்டியன் லகார்ட் சிறப்பாக பணியாற்றுகிறார். அவருக்கு மேலும் பதவி நீட்டிப்பு கிடைக்கலாம். பிரிக்ஸ் வங்கி தொடங்கப்பட்ட போது என்னுடைய பெயர் அடிப்பட்டது. பத்திரிகைகள் ஒவ்வொரு மாதமும் எனக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்று கூறியிருக்கிறார். ஆனால் இப்போது சர்வதேச செலாவணி மையத்தின் தலைவர் பதவிக்கு ரகுராம் ராஜன் சிறந்த தேர்வு என்று கட்டுரை எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.
என்ன காரணம்?
இந்த செய்தி வருவதற்கு ஒரு முக்கிய மான காரணம் இருக்கிறது. கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் நியமிக்கப்பட்டார். இவரது பதவிக் காலம் 2016-ம் ஆண்டு செப்டம்பருடன் முடிவடைகிறது. அதே சமயத்தில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஐஎம்எப் தலைவராக கிறிஸ்டியன் லகார்ட் இருக்கிறார். இவரது பதவிக் காலம் 2016-ம் ஆண்டு ஜூலையில் முடிவடைகிறது.
கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் இருவரின் பதவியும் முடிவடைவதால் ராஜன் ஐ.எம்.எப். தலைவராக நியமிக்கப்படலாம் என்ற யூகங்கள் எழுந்தன. தவிர 2013-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு ராஜனை நியமித்தது. அதனால், ரிசர்வ் வங்கியின் கவர்னராக ரகுராம் ராஜன் தொடர்வதற்கு நீட்டிப்பு வழங்க வாய்ப்பு இல்லை என்றும் கருதப்படுகிறது. தவிர சர்வதேச செலாவணி மையத்தில் ஏற்கெனவே தலைமை பொருளாதார வல்லுநராக ராஜன் இருந்திருக்கிறார். (2003 முதல் 2006-ம் ஆண்டு வரை) அவர், அங்கு பொருளாதார வல்லுநராக இருந்தபோதுதான் 2008-ம் ஆண்டு பொருளாதார மந்த நிலை வரும் என்பதை முன்கூட்டியே கணித்து தனது ஆய்வில் தெரிவித்தவர் என்பதால் ஐ.எம்.எப்.க்கும் அவருக்கும் பரிச்சயம் இருக்கிறது.
அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்வு, ஐரோப்பாவில் மந்தநிலை, சீனாவில் தேக்கம் உள்ளிட்ட சர்வதேச சூழல் நிலவும் போது ரகுராம்ராஜன் போன்ற தேர்ந்த அறிவுடைய நபர் தலைமைப் பொறுப்பை ஏற்று சிறப்பாக கையாளமுடியும் என்ற கருத்தும் இருக்கிறது. ரகுராம் ராஜனுடன் இந்த மேடையை பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பொறுப்பேற்றதில் இருந்து இந்திய பொருளாதாரத்தை பாதுகாப்பாக வழிநடத்துகிறார் என்று தற்போதைய தலைவர் கிறிஸ்டியன் லகார்ட் சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்ததால் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.
சிக்கல் என்ன?
இருந்தாலும், இவர் நியமிக்கப்படாமல் போவதற்கும் கூட வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ஒரு `ஜென்டில்மேன்’ ஒப்பந்தம் இருக் கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராகவும், ஐஎம்எப் தலைவர் ஐரோப்பியராகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். பெல்ஜியம், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்தான் இதுவரை ஐஎம்எப் தலைவராக இருந்து வந்திருக்கிறார்கள்.
மைக்ரோசாப்ட், கூகுள், மாஸ்டர்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இந்தியர்கள் தலைவராக இருக்கும்போது ஏன் ஐஎம்எப்-ல் இந்தியர் இருக்க கூடாது?
Chennai Today News: The next president of IMF