விஜயகாந்துக்கு உண்மையிலேயே செல்வாக்கு இருக்கின்றதா? ஒரு அலசல்

விஜயகாந்துக்கு உண்மையிலேயே செல்வாக்கு இருக்கின்றதா? ஒரு அலசல்

vijayakanthதமிழகத்தில் பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தவிர மற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் தேமுதிகவை வளைத்து போடுவதிலேயே குறியாக உள்ளது. அந்த அளவுக்கு தேமுதிகவுக்கு ஓட்டு வங்கி இருக்கின்றதா? என்று கேட்டால் இல்லை என்ற பதில்தான் நடுநிலையாளர்களிடம் இருந்து வந்து கொண்டிருக்கும் நிலையில் எதற்காக அனைத்து கட்சிகளும் தேமுதிகவை தேடி செல்கின்றன என்பது புரியாத புதிராக உள்ளது.

தேமுதிக என்ற கட்சியை விஜயகாந்த் ஆரம்பித்தவுடன் சந்தித்த முதல் தேர்தலில் 12% வாக்குகள் பெற்றார். ஆனால் அடுத்தடுத்த தேர்தலில் அவருடைய கட்சியின் வாக்குவங்கி குறைந்து தற்போது 5%க்கும் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

கடவுளுடனும், மக்களுடனும் மட்டுமே கூட்டணி என்று ஐந்து ஆண்டுகாலம் தொடர்ந்து முழக்கமிட்ட விஜயகாந்த் திடீரென அதிமுகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே அதன் நம்பகத்தன்மை போய்விட்டது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகளில் போட்டியிட்டு 11 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. திருப்பூர், விழுப்புரம், சேலம் ஆகிய 3 தொகுதிகளில் மட்டும் டெபாசிட் பெற்று செல்வாக்கை இழந்த ஒரு கட்சியை தேடிச்செல்லும் கட்சிகளும் செல்வாக்கு இல்லாத கட்சிகள்தான் என எண்ண தோன்றுகிறது.

விஜயகாந்தின் கோமாளித்தனமான பேச்சுகளும், அர்த்தமற்ற நடவடிக்கைகளையும் பார்க்கும்போது வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை சந்திப்பது மட்டுமின்றி தன்னுடன் சேரும் கூட்டணி கட்சிகளையும் குழிக்குள் தள்ளிவிட்டுவிடுவார் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

இப்போதுள்ள நிலைமையில் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே தேமுதிக வேட்பாளர்கள் டெபாசிட் வாங்க முடியும் என்பதுதான் உண்மை. அதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையில் தேமுதிக கண்டிப்பாக திமுகவுடன் தான் கூட்டணி வைத்தே ஆகவேண்டிய நிலை. பாஜக, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி ஆகியவற்றை விஜயகாந்த் கடைசி நேரத்தில் கைகழுவி விடுவார் என்பதுதான் நிதர்சனமான உண்மை என்று கூறப்படுகிறது.

எனவே திமுக தலைவர் கருணாநிதி கொஞ்சம் பொறுமையாக இருந்தாலோ அல்லது தேமுதிக கூட்டணி தேவையில்லை என்று அறிவித்தாலோ விஜயகாந்துக்கு பதற்றம் ஏற்படும் என்பது உறுதி. அரசியல் சாணக்யர் கருணாநிதி என்ன செய்யப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Chennai Today News: What is the value of Vijayakanth?

Leave a Reply