புத்தாண்டு முதல் மத்திய அரசு இளநிலை பணிகளுக்கு நேர்முகத் தேர்வு ரத்து
மத்திய அரசின் இளநிலை பணியிட நியமனங்களில் நேர்முக தேர்வு முறையை நீக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை வரும் புத்தாண்டு முதல் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும், அமைச்சகங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை எழுதியுள்ள கடிதத்தில் ‘‘எதிர்காலத்தில் பணியாளர் தேர்வு நடவடிக்கை விளம்பரங்கள், நேர்முக தேர்வு இன்றி வெளியிடப்பட வேண்டும் என்றும், நேர்முக தேர்வு கிடையாது என்பது அனைத்து குரூப் சி, அரசிதழ் பதிவு பெறாத குரூப் பி பிரிவுகளுக்கு, அதற்கு சமமான பிற பணியிடங்களுக்கு பொருந்தும் என்றும், அதே சமயம், திறன் அறியும் சோதனை, உடல் தகுதி சோதனை தொடரும். எனினும் இந்த சோதனைகள், தகுதி அடிப்படையில் இருக்கும். இத்தகைய சோதனைகள் மதிப்பெண்கள் அடிப்படையில் இருக்காது’’ என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனிடயே சில குறிப்பிட்ட பணிகளுக்கு நேர்முகத்தேர்வு அவசியம் என்று அமைச்சக துறைகள் கருதினால், நேர்முக தேர்வு இல்லை என்ற நடைமுறையில் இருந்து விலக்கு கேட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஒப்புதலுடன் மத்திய பணியாளர், பயிற்சி துறைக்கு விரிவாக எழுத வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக ஜனவரி 7ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு அனைத்து அமைச்சங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.